உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு; விவசாயிகள் உண்ணாவிரதம்

புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு; விவசாயிகள் உண்ணாவிரதம்

கருமத்தம்பட்டி; ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அழித்து அமைக்க திட்டமிடப்பட்டுள்ள, கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பல்லடம் - திருச்சி ரோட்டில் உள்ள செம்மிபாளையத்தில் இருந்து, கருமத்தம்பட்டி அருகே அவிநாசி ரோடு வழியாக, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மத்தம்பாளையம் ரோடு வரை, 81 கி.மீ. தூரத்துக்கு, கிழக்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியது. பல பகுதிகளில் நிலமெடுப்புக்கு அடையாளமாக மார்க்கிங் செய்யும் பணி நடந்தது. இதையறிந்த விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. திட்டத்தை கைவிட கோரி, கருமத்தம்பட்டி அருகே உண்ணாவிரத போராட்டத்தை நேற்று நடத்தினர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் பேசினர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கந்தசாமி, அருண்குமார் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். நிர்வாகிகள் கூறுகையில், 'பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை அழித்து இத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. விவசாயத்தையும், நீர் நிலைகளையும், விவசாயிகளையும் பாதிக்கும் இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே உள்ள ரோடுகளை அகலப்படுத்த வேண்டும். ரோடுகளை இணைக்க வேண்டும் என மாற்று திட்டத்தையும் வலியுறுத்தி வருகிறோம். எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், பல போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ