வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தனி நபர் மீது தான் காழ்ப்புணர்ச்சி. மலையை காக்க அல்ல
உடுமலை: உடுமலை அருகேயுள்ள ஜம்புக்கல் மலையை மீட்க வலியுறுத்தி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடுமலை அருகேயுள்ள ஆண்டியகவுண்டனுார் பகுதியில், 2,700 ஏக்கர் பரப்பளவில் ஜம்புக்கல் மலைத்தொடர் அமைந்துள்ளது. சமதளப்பரப்பிலுள்ள, 350 ஏக்கர் விவசாயிகளுக்கு, ஆடு, மாடு மேய்க்கும் வகையில், கண்டிசன் பட்டா வழங்கப்பட்டிருந்தது. போலி ஆவணங்கள் வாயிலாகவும், விதி மீறியும் ஒட்டுமொத்த மலையையும் தனியார் ஆக்கிரமித்து, மரங்களை வெட்டியும், மலையிலுள்ள கனிமங்களை வெட்டியும் பசுமையான மலையை அழித்து வருவதாக, விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை மற்றும் போலீசார் என அரசு துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, அமராவதி வனச்சரக அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், வனத்துறைக்கு சொந்தமான மலையை காப்பாற்றுமாறு விவசாயிகள் மனு அளித்தனர். அதிகாரிகள் அலட்சியமாக, ''மலை எங்களுக்கு சொந்தமில்லை; வருவாய்த்துறையிடம் கேளுங்கள்'' என பதில் அளித்ததால், அதிருப்தியடைந்த விவசாயிகள், ஜம்புக்கல் மலையடிவாரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை, வனத்துறை, போலீசார் பேச்சு நடத்தினர். விவசாயிகள் கூறியதாவது: அரசுக்கு சொந்தமான ஜம்புக்கல் மலையை தனியார் ஆக்கிரமித்து, ஒட்டுமொத்தமாக அழித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கன்டிசன் பட்டாவை விதி மீறி, ஏறத்தாழ, 6 ஏக்கர் மட்டும் கிரையம் பெற்றுள்ளனர். தொடர்ந்து முறைகேடாக போலி ஆவணங்கள் வாயிலாக, மலையை ஆக்கிரமித்துள்ளதோடு, மரங்களையும், கனிமங்களையும் வெட்டி எடுத்து வருகின்றனர். வருவாய்த்துறை, நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், மலையில் எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. ஆனால், சம்மந்தப்பட்ட நபர், கனரக அகழாய்வு இயந்திரங்கள், லாரிகள் வாயிலாக தொடர்ந்து மலையை அழித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், அலட்சியமாக உள்ளனர். அதனால், சுற்றுப்புற கிராம விவசாயிகள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் போராட்டத்தை துவக்கியுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
தனி நபர் மீது தான் காழ்ப்புணர்ச்சி. மலையை காக்க அல்ல