ரூ.5 லட்சம் பொருளீட்டு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அன்னுார்; ஐந்து லட்சம் ரூபாய் வரை பொருளீட்டுக்கடன் பெற விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அழைப்பு விடுத்துள்ளது. கோயம்புத்தூர் விற்பனைகுழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை : அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2,350 டன் கொள்ளளவு கொண்ட குடோன்கள் மற்றும் உலர்திடல்கள் உள்ளன. விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த தேங்காய், நிலக்கடலை, மஞ்சள், மக்காச்சோளம், நெல், சோளம், கம்பு, ராகி, எள் உள்ளிட்ட விளை பொருட்களை விலை வீழ்ச்சி காலத்தில் இங்கு இருப்பு வைத்துக் கொள்ளலாம். 180 நாட்கள் வரை இருப்பு வைத்து கடனாக ரூபாய் 5 லட்சம் அல்லது விளைபொருளின் மதிப்பில் 50 முதல் 70 சதவீதம் வரை பெற்றுக் கொள்ளலாம். ஐந்து சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். முதல் 15 தினங்களுக்கு வட்டி தரத் தேவையில்லை. பொருளீட்டு கடன் காலத்திற்கு வாடகையும் இல்லை. அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடம் தேசிய வேளாண் சந்தையில் இணைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு புதன்தோறும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுகிறது. மேலும் பருத்தி, வாழைத்தார், காய்கறி, பழங்களுக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை பெற்று தரப்படுகிறது. எனவே விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்களை விற்று உழவர் நல நிதி திட்டத்தில் பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.