உழவரை தேடி உழவர் நலத்துறை சிறப்பு முகாம் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
- நிருபர் குழு -மடத்துக்குளம் வட்டாரத்தில், வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்கும் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திருமதி உமாசங்கரி கூறியதாவது:'உழவரைத்தேடி உழவர் நலத்துறை' என்ற திட்டத்தின் கீழ், வேளாண்- உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகள் மற்றும் சார்பு துறைகளான, கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் உள்ளிட்டோரை கொண்ட குழுவினர், கிராமங்களுக்கு நேரடியாக சென்று, விவசாயிகளுக்கு தேவையான சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அரசின் மானிய திட்டங்கள் குறித்து விளக்கும் முகாம்கள் நடந்து வருகிறது.மடத்துக்குளம் வட்டாரத்தில், தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சார்பில், இன்று (29ம் தேதி) 10:00 மணிக்கு, துங்காவி, பஸ் ஸ்டாப் அருகிலுள்ள கிராம சேவை மையத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறைக்கான திட்டங்களை எடுத்துக்கூறி விளக்கம் அளிப்பதோடு அரசு திட்டங்களை விவசாயிகள் பெறுவதற்காக முன்பதிவும் செய்யப்படுகிறது.மடத்துக்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு, மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். குடிமங்கலம்
'உழவரை தேடி வேளாண்மை' திட்டத்தின் கீழ், கொங்கல்நகரம் கிராமத்தில், விவசாயிகளுக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று நடக்கிறது.முகாமில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.சுற்றுப்பகுதி விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். இன்று காலை 10:00 மணிக்கு கொங்கல்நகரம் ஊராட்சி அலுவலகத்தில் முகாம் நடைபெறும்.இத்தகவலை குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு வட்டாரத்தில், 12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். தற்போது தமிழக அரசின் அறிவுறுத்தல் படி, கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 'உழவரை தேடி வேளாண்மை' - திட்ட முகாம் நடக்கிறது.இதன் துவக்க விழா, இன்று, மெட்டுவாவி மகளிர் சுய உதவி குழு வளாகம் மற்றும் கோடங்கிபாளையத்தில் மகாலட்சுமி கோவில் வளாகத்தில் காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.முகாமில், வேளாண் சார்ந்த அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் இருப்பதால், விவசாயிகள் திட்டங்கள், சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். மேலும், பயிர் சார்ந்த தொழில்நுட்ப ஆலோசனைகள், கால்நடை பராமரிப்பு, பட்டு வளர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது.ஒரே முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் இருப்பதால் விவசாயிகள் பிரச்னையை எளிதாக தீர்க்க முடியும். இத்திட்டமானது, 34 ஊராட்சிகளிலும், இரண்டு குழுக்களாக பிரிந்து, 2 மற்றும் 4வது வெள்ளிக்கிழமை நாட்களில் நடத்தப்பட உள்ளது. இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.