உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புறவழிச் சாலை திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

புறவழிச் சாலை திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

அன்னுார்: புறவழிச் சாலை திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.கோவையை அடுத்த அன்னுார் அருகே உள்ள கரியாம்பாளையம் செல்வநாயகி அம்மன் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கலெக்டர் பவன்குமாரிடம் மனுக்கள் அளித்தனர். அப்போது கோவை புறவழிச் சாலை திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலெக்டரிடம் கூறுகையில்,' புறவழிச் சாலை திட்டத்தால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பறிபோகும். பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த விவசாயிகள் தங்கள் வாழ்விடங்களை விட்டுச் செல்ல வேண்டி இருக்கும். பல ஆயிரம் கால்நடைகள் வளர்க்கும் பணி அழிந்து போகும். குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கிணறுகள் பாதிக்கப்படும். இதற்கு மாற்றாக ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது,' என்றனர் .கலெக்டர் இது குறித்து நெடுஞ்சாலைத்துறையிடம் பேசுகிறேன் என உறுதி அளித்தார்.செம்மாணி செட்டிபாளையம் விவசாயி ஒருவர் மனு அளித்து கூறுகையில், உடனடி மின் இணைப்பு திட்டத்தில், மும்முனை மின்சாரம் தோட்டத்திற்கு பெற ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மூன்று லட்சம் ரூபாய் செலுத்தினேன். 90 நாட்களில் இணைப்பு தருவதாக கூறியவர்கள் 500 நாட்களாகியும் தரவில்லை, என்றார்.கரியாம்பாளையம் காந்திநகர் இபி அலுவலக வீதியைச் சேர்ந்தவர்கள் மனு அளிக்கையில், 'வீடு கட்டி 10 ஆண்டுகளாகியும் கழிவுநீர் வடிகால் அமைக்கவில்லை. வீடுகளுக்கு முன் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது,' என்றனர்.பெண்கள் பலர் மனு கொடுத்து பேசுகையில், 'எங்களுக்கு சொந்த வீடு இல்லை. வருமானம் இல்லை. ஆனால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை,' என்றனர்.சிலர் இலவச வீட்டு மனை பட்டா கோரி 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. தொகுப்பு வீடு கோரி வருகிறோம். சர்வே செய்ய பலமுறை மனு அளித்தும் சர்வே செய்யவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என புகார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை