விவசாயிகள் பேரணி கோரிக்கை மாநாடு
சூலுார்; உழவர் தினத்தை ஒட்டி, கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் சார்பில் பேரணி மற்றும் மாநாடு சூலூரில் நடந்தது.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் சங்கம் சார்பில், உழவர் தின பேரணி மற்றும் கோரிக்கை மாநாடு சூலூரில் நடந்தது. மாநில செயல் தலைவர் வெற்றி, பேரணியை துவக்கி வைத்தார். மாநில தலைவர் சண்முகம் தலைமையில் கோரிக்கை மாநாடு சீரணி அரங்கில் நடந்தது.நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீர் கொண்டு வர வேண்டும். விவசாய கடன்களுக்கான சிபில் ஸ்கோர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.எம்.எல்.ஏ., கந்தசாமி, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.