உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நேரத்தில் மூன்று பயிர்கள் விவசாயம்

ஒரே நேரத்தில் மூன்று பயிர்கள் விவசாயம்

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே, ஒரு விவசாய நிலத்தில், ஒரே நேரத்தில் மூன்று பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இதனால் விவசாயிக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காரமடை அருகே வெள்ளியங்காடு பகுதியில் கிருஷ்ணன் என்பவர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒரே நேரத்தில் தேன் வாழை, சின்ன வெங்காயம், தக்காளி ஆகிய மூன்று பயிர்களை பயிர் செய்துள்ளார். இது குறித்து முன்னோடி விவசாயியான தேவராஜ் கூறியதாவது: பொதுவாக வாழையில் ஊடுபயிராக பயறு வகைகள், பூ செடிகளை பயிர் செய்து வழக்கம். மூன்று மாதங்களில் பயறு, பூக்களை அறுவடை செய்த பின், வாழைக்கு உரமாக செடிகளை பயன்படுத்துவர். ஆனால் சற்று வித்தியாசமாக இந்த முறை பரிசார்த்த முறையில், ஒரே நேரத்தில் வாழையில் ஊடுபயிராக, சின்ன வெங்காயம், தக்காளி ஆகிய இரண்டு பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. தேன் வாழை ஏழடிக்கு ஏழு அடி என்ற அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. மூன்றடி இடைவெளியில் சின்ன வெங்காயமும், மூன்றடி இடைவெளியில் தக்காளியும் நடவு செய்யப்பட்டுள்ளது. வாழையில் தார் அறுவடை செய்ய, 12 மாதங்களாகும். சின்ன வெங்காயம் நடவு செய்த, 3 மாதங்களில் அறுவடை செய்து விடலாம். தக்காளி நடவு செய்த மூன்றாவது மாதத்தில், காய் பிடித்து அறுவடை துவங்கும். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பழங்களை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். சொட்டு நீர் பாசன முறையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. ஒரே நேரத்தில் மூன்று பயிர்கள், பயிர் செய்யப்பட்டதால் அடுத்தடுத்து விவசாயிக்கு வருவாய் வந்து கொண்டே இருக்கும். மூன்று மாதத்தில் ஒரு வருவாயும், ஆறு மாதத்தில் ஒரு வருவாயும் கிடைக்கும். இதனால் விவசாயிக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை