லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகன் பலி; ஸ்கேட்டிங் பயிற்சிக்கு சென்ற போது சோகம்
கோவை; ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 36; கோவையில் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு, 9 மற்றும் 7 வயதில் இரு மகன்கள். சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் கோவை வந்த அவர், துடியலுார் சாலையில் உள்ள அபார்ட்மென்டில் வசித்து வந்தார். ராஜேஷின் மூத்த மகன் வினீத், 9 காளப்பட்டியில் உள்ள ஒரு ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், வினித்தை ஸ்கேட்டிங் பயிற்சிக்கு தனது ஸ்கூட்டரில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.சரவணம்பட்டியில் இருந்து காளப்பட்டி ரோட்டில் திரும்பும் போது, பின்னால் வேகமாக வந்த 'டிப்பர் லாரி', ராஜேஷ் ஸ்கூட்டரில் உரசியது. இதில் தந்தை, மகன் இருவரும் சாலையில் விழுந்தனர். லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.போக்குவரத்து புலனாய்வு போலீசார், இருவரது உடலையும் மீட்டனர். டிப்பர் லாரி ஓட்டுநர் திருப்பூரை சேர்ந்த மனோகரனை, 52 கைது செய்து விசாரிக்கின்றனர். எமனாக வரும் லாரிகள்
மாநகர பகுதிகளில் டிப்பர் லாரிகளால், ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்., மாதம் வரை மட்டும் 11 பேர் லாரி மோதி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், வடவள்ளி இடையர்பாளையம் சாலையில், ஒரு பெண் டிப்பர் லாரி மோதி உடல் நசுங்கி உயிரிழந்தார். தொடர்ந்து, டிப்பர் லாரிகளால் அப்பாவி உயிர்கள் பலியாவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேச வேண்டும்.நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார், சிக்னல்கள் செயல்பாடுகள் இல்லாத நேரங்களில் விதிகளை மீறி செயல்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்தி அப்பாவி மக்களின் உயிர்களை பாதுகாக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.