டெபாசிட் தொகை திருப்பித்தர நிதி நிறுவனத்துக்கு உத்தரவு
கோவை; நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்த தொகையை, வட்டியுடன் சேர்த்து திருப்பி கொடுக்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, வேலாண்டிபாளையத்தை சேர்ந்த பால்ராஜ் மனைவி சாந்தாமணி,64,என்பவர், தேவாங்க பேட்டையிலுள்ள ஸ்ரீ ஆர்.பி., பைனான்சில், 2020ல், 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தார். குறிப்பிட்ட சில மாதங்களுக்கு மட்டும் மாதாந்திர வட்டி கொடுத்தனர். அதன்பிறகு வட்டி தரப்படவில்லை. இந்நிலையில், சாந்தாமணியின் கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, டெபாசிட் தொகையினை திருப்பி தருமாறு கேட்டனர். ஆனால், பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.இதனால் வட்டியுடன் சேர்த்து, பணத்தை திரும்ப தரக்கோரியும், இழப்பீடு கேட்டும் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு டெபாசிட் தொகை 1.5 லட்சம் ரூபாயுடன், 15 சதவீத வட்டி சேர்த்து, திரும்ப கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.