கனிமவளக் கொள்ளை என்ற பெயரில் அபராதம்; கோட்டாட்சியர் மீது கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
கோவை; அரசு நிலங்களில் அனுமதியின்றி கனிமவளம் கொள்ளை போனதாக, 356 விவசாயிகளுக்கு அபராதம் விதித்துள்ள கோவை தெற்கு கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கோவை தெற்கு வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பேரூர் தாலுகா எல்லையிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில் விவசாயப் பணிகளை மேற்கொண்டுவரும் விவசாயிகள், பட்டா மற்றும் அரசு நிலங்களில் அனுமதியின்றி மண் எடுத்ததாக, 356 விவசாயிகளை விசாரணைக்கு ஆஜராக கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார் நோட்டீஸ் வழங்கியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விசாரணைக்கு ஆஜரான விவசாயிகளிடம் கனமீட்டருக்கு, 160 ரூபாய் வீதம் அபராதம் விதித்து ஒவ்வொரு விவசாயிக்கும் பல லட்சங்களை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் விவசாயிகளின் மீது கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியுள்ளது கடும் அதிருப்தியை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர்: கலெக்டர் கோட்டாட்சியரிடம் பேசி உண்மை நிலை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதன் பின்பு ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டும் என்பதற்காக அப்பாவி விவசாயிகள் மீது அபராதம் விதித்துள்ளனர். கனிமவளக் கொள்ளைக்கு சம்மந்தமில்லாத விவசாயிகள் மீது அபராதம் விதிக்க காரணமாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து தேவராயபுரத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறியதாவது:மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மழை பெய்யும் போது பள்ள வாரிகளில் வரும் தண்ணீர் விளைநிலங்களில் பெருக்கெடுக்கும். நிலத்தை சமப்படுத்தியே விவசாயம் மேற்கொள்ள முடியும். அதற்காக நாங்கள் எங்களது நிலத்தை சமப்படுத்தினால் அதற்கு அபராதம் விதிக்கின்றனர். விவசாயி கனிமவளத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துசெல்லவில்லை. அப்படியிருக்கும் சூழலில் எங்கள் மீது அபராதம் விதிப்பது தவறு. உண்மை நிலையை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் கள நிலவரத்தை அறிய வேண்டும். அதனால், 356 விவசாயிகள் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.