மாநகராட்சி குப்பை குடோனில் தீ விபத்து
கோவை; கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை தரம் பிரிக்கும் குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது.கோவை கவுண்டம்பாளையம், எரு கம்பெனி பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் குடோனில் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெறுகிறது. இதில், பழைய பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்ட ஏராளமான குப்பைகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், நேற்று காலை குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதைப்பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.அதற்குள் தீ குடோன் முழுவதும் பரவியது. இதையடுத்து, தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் புளுகாண்டி தலைமையில், வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் மேற்பார்வையில் நான்கு வாகனங்களில், 20 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 7.30 முதல் மதியம் 2.30 மணி வரை சுமார் ஏழு மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனிடையில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று தீயணைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.