சோலையாறு அணை பகுதியில் தீயணைப்பு நிலையம் தேவை
வால்பாறை,; சோலையாறு அணை பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ள சோலையாறுடேம் பகுதி சுற்றியுள்ள தொழிலாளர்கள்,மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை நகரில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் இணைப்பு காரணமாக தொழிலாளர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின் கசிவால் தீ விபத்து ஏற்படுகிறது. வீடுகளில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைகின்றன.இது போன்ற, சூழ்நிலையில் வால்பாறை நகரிலிருந்து தொலை துார எஸ்டேட் பகுதியான பன்னிமேடு, உருளிக்கல், ேஷக்கல்முடி, முருகாளி, கல்யாணப்பந்தலுக்கு, தீயணைப்பு வாகனம் செல்வதற்குள் அதிக சேதம் ஏற்படுகிறது. தொலைத்தொடர்பு 'நெட் ஒர்க்' பிரச்னையால் சில நேரங்களில் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் உள்ளது.எனவே, சோலையாறு பகுதியில், புதிய தீயணைப்பு நிலையம் துவங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.