உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டாசு கழிவால் கால்நடைகளுக்கு பாதிப்பு மேய்ச்சல் நிலத்திலிருந்து அகற்றணும்

பட்டாசு கழிவால் கால்நடைகளுக்கு பாதிப்பு மேய்ச்சல் நிலத்திலிருந்து அகற்றணும்

பொள்ளாச்சி: பட்டாசு வெடித்து மகிழ்ந்தாலும், அந்த் கழிவுகளை கால்நடைகள் மேய்ச்சல் நிலங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும், குவிந்திருக்கும் கழிவுகளை அகற்ற வேண்டுமென, வலியுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், பால் உற்பத்திக்காக கால்நடைகள் வளர்ப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல், புற்கள் இல்லாததால், மேய்ச்சலுக்காக ஆங்காங்கே அவிழ்த்து விடப்படுகின்றன. இந்நிலையில், தீபாவளிக்கு பட்டாசு வெடித்து மகிழ்ந்த பலர், பட்டாசு கழிவுகளை முறையாக சேகரித்து, உள்ளாட்சி துாய்மைப் பணியாளர்களிடம் வழங்காததால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பாதிக்கின்றன. திறந்தவெளி மற்றும் குடியிருப்பை ஒட்டிய காலி நிலப்பகுதிகளில், பட்டாசு கழிவுகளை வீசியதே இதற்கு காரணம். அதன்படி, பட்டாசு கழிவில் உள்ள ரசாயனம் புற்கள் மேல் படர்ந்து விடுவதால், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் அதனை உட்கொண்டு பெரிதும் பாதிக்கின்றன. இது குறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது: தீபாவளிக்கு பலரும் பட்டாசு வெடிக்கும் போது, திடீரென உண்டாகும் ஒலியை கேட்டு, கால்நடைகள் மட்டுமின்றி தெருநாய்கள், செல்லப்பிராணிகள், பறவை இனங்கள் அச்சப்படும். தற்காத்துக் கொள்ள மறைவான இடங்களில் பதுங்கி விடும். பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிப்பதை தவிர்க்க முடியாது என்றாலும் அதன் கழிவுகளை பாதுகாப்புடன் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். மாறாக, தெருக்களில் விட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த ரசாயனங்கள், தெருநாய்கள், கால்நடைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி, நோய் பாதிப்பை உண்டாக்கும். பட்டாசு கழிவுகளை, மேய்ச்சல் நிலங்கள், திறந்தவெளியில் குவித்திருப்பதை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி