மேலும் செய்திகள்
தபால் சேவை; கோவை கோட்டத்துக்கு விருது
28-Aug-2025
கோவை; வணிக மேம்பாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக, தமிழக வட்ட அளவில் முதலிடம் பிடித்த ஆர்.எம்.எஸ். கோவை கோட்டத்துக்கு, விருது வழங்கப்பட்டது. தபால் துறை சார்பில், தமிழக வட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்கள், உப கோட்டங்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா, சென்னையில் நடந்தது. விரைவு பார்சல் பிரிவில், 3.34 கோடி ரூபாய் வருமானம், பதிவு பார்சல் பிரிவில் 32 லட்சம் வருமானம், லாஜிஸ்டிக் பார்சல் பிரிவில், 4.6 கோடி ரூபாய் என்பன உட்பட பல பிரிவுகளை அடங்கிய வணிக மேம்பாட்டில், கடந்த நிதியாண்டில் 12.48 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, ஆர்.எம்.எஸ். கோவை கோட்டம், தமிழக வட்ட அளவில் முதலிடம் பிடித்தது. லாஜிஸ்டிக் பார்சல் வணிகத்தில், தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகத்தின், 9,000 டன் எடையுள்ள நுால்களை, மில்களிடம் இருந்து பெற்று, கைத்தறி சொசைட்டிகளுக்கு, ஆர்.எம்.எஸ்.கோவை கோட்டம் விநியோகித்தது. தவிர, கோ--ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் பொருட்களை, கோவை மற்றும் சென்னிமலையில் உள்ள கிடங்குகளில் இருந்து பெற்று, தமிழகத்தில் உள்ள அதன் பல்வேறு கிளைகளுக்கு, லாஜிஸ்டிக் போஸ்ட் பார்சல் வாயிலாக சேர்த்துள்ளது. தமிழக வட்ட முதன்மை தபால் துறை தலைவர் மரியம்மா தாமஸ் விருது வழங்க, கோவை கோட்டம் சார்பில், கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு பெற்றுக்கொண்டார். இரண்டாவது நிதி ஆண்டாக, இவ்விருதை, இக்கோட்டம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கு மண்டல தபால் துறை தலைவர் சரவணன், மத்திய மண்டல தபால் துறை தலைவர் நிர்மலா தேவி, சென்னை நகர தபால் துறை தலைவர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Aug-2025