நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தொண்டாமுத்துார்: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும், மலைப்பகுதிகளை காட்டிலும், ஊருக்குள் அதிக மழை பெய்து வருகிறது. தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை, தொடர்ந்து கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில், வைதேகி நீர்வீழ்ச்சி பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. நொய்யல் ஆற்றில் நேற்று அதிகாலை முதல், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றில் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், நேற்று, வினாடிக்கு, 750 கன அடி தண்ணீர் வெளியேறியது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து சென்றனர். ஆபத்தை உணராமல், ஏராளமான இளைஞர்கள், ஆற்று வெள்ளத்தில் இறங்கி குளிப்பது, ஆற்றின் நடுவில் சென்று மீன் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ரோந்து வந்த போலீசார் அவர்களை விரட்டினர். போலீசார் சென்றதும், மீண்டும் இளைஞர்கள் ஆற்றில் இறங்கி, விளையாடின ர். இப்பகுதியில், போலீசார் தொடர்ந்து ரோந்து பணியை அதிகரிக்க வேண்டியுள்ளது.