சோலார் மின் வேலிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் வனத்துறை சோதனை
மேட்டுப்பாளையம்; காரமடை வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில், சோலார் மின் வேலிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் செலுத்தப்படுகிறதா என வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை, காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொந்தரவு அதிகம் உள்ளது. வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாமல் இருக்க, இப்பகுதிகளில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் அதனை மிகவும் சுலபமாக மிதித்தும், மரக்கிளைகளை துாக்கி வீசியும் விளை நிலங்களுக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. அதனால் சில இடங்களில், தொங்கு சோலார் மின் வேலிகளை விவசாயிகள் பலர் உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில், சோலாருக்கு பதில் நேரடி மின்சாரம் மின்வேலியில் சட்டவிரோதமாக பாய்ச்சப்படுகிறதா என காரமடை வனத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:- சோலார் மின் வேலிகளை அனுமதி அளிக்கப்பட்ட அளவே அதில் மின் அழுத்தம் இருக்க வேண்டும். சட்டவிரோதமாக நேரடியாக அதில் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு சட்டவிரோதமாக மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என காரமடை வனத்துறை சார்பில் வனப்பகுதி யையொட்டியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகிறோம். அப்போது மின் அளவை கணக்கீடும் கருவி வாயிலாக மின் வேலிகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை மாதம் இரண்டு முறை இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறோம். வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வந்தால், வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அதே போல் இ.பி. போஸ்ட்கள் சேதமாகி இருந்தாலோ, மின் கம்பிகள் அருந்து தொங்கினாலோ உடனடியாக வனத்துறைக்கும், மின்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால் மனித உயிர் மற்றும் வனவிலங்குகள் உயிர் மின் விபத்தில் இருந்து பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.