அழிவின் பட்டியலில் நன்னீர் மீன்கள் பாதுகாக்க வனத்துறை முயற்சி
கூடலுார்:கூடலுார், ஜீன்பூல் தாவரவியல் மைய மீனகத்தில், அழிவின் பட்டியலில் உள்ள 'ஆரல்' உட்பட, நன்னீர் மீன்களை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் சுத்தமான நீர்நிலைகளில், 110 வகை மீன்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஊட்டி, கூடலுார் வனப்பகுதிகளில் காலநிலை மாற்றம் காரணமாக அழிந்து வரும் 'நன்னீர்' மீன்களை பாதுகாக்க, ஜீன்பூல் சூழல் சுற்றுலா மையத்தில், நவீன வசதிகளுடன் மீன் தொட்டிகளை கொண்டு, நன்னீர் மீனகம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ளூரில் கிடைக்கும், 'சிலோடி, சேலை பறவை, கவுளி, ஆரல், கல்லொட்டி, சிலோபி, உட்பட 26 வகை நன்னீர் மீன்களை சேகரித்து, வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர். அதில், அழிவின் பட்டியலில் உள்ள அரிய ஆரல் நன்னீர் மீன்களையும் கண்டறிந்து பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர். பாம்பு போன்ற உடல் அமைப்பு கொண்ட ஆரல் நன்னீர் மீன்கள், சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்து வருகிறது. வனத்துறையினர் கூறுகையில், 'நன்னீர் மீன்கள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இங்கு வளர்க்கப்படும், ஆரல் நன்னீர் மீன், ஓராண்டுக்கு முன் கிடைத்த போது அதன் நீளம், 30 செ.மீ., ஆக இருந்தது. தற்போது, 70 செ.மீ., ஆக மாறி உள்ளது. இவை, 1.5 மீட்டர் வரை வளரும்' என்றனர்.