மேலும் செய்திகள்
காரமடையில் திடீர் காட்டுத்தீ
27-Feb-2025
மேட்டுப்பாளையம்,: காரமடை வனப்பகுதியில் கீழே விழுந்த மரங்களை வெட்டி கடத்தியவரை கண்டுபிடித்து, வனத்துறையினர் அபராதம் விதித்தனர். மரங்களை வெட்டி கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காரமடை வனச்சரகத்தில் மானார் பிரிவு, வீரக்கல், குண்டூர், அத்திக்கடவு, கொரவன்கண்டி, பில்லுார், முள்ளி போன்ற அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இதில் மானார், கெத்தைக்காடு, வீரகல் மலைக்கிராமங்களில் ஏராளமான மரங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மரங்களை சிலர் வெட்டி லாரியில் கடத்தியதாக காரமடை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.காரமடை வனச்சரகர் ரஞ்சித் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஏற்கனவே காய்ந்து கீழே விழுந்த பெரிய மரங்களை வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் வெட்டி லாரியில் கடத்தியது தெரியவந்தது.இதையடுத்து, காய்ந்த கீழே விழுந்த மரங்களை வெட்டி கடத்திய குற்றத்திற்காக, சின்னசாமிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து, அபராத தொகையை வனத்துறையினர் வசூல் செய்தனர்.இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறியதாவது:-வனப்பகுதியில் உள்ள மரங்கள் உயிருடன் இருந்தாலும், காய்ந்து கீழே விழுந்தாலும், அவை எப்போதும் வனத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. கீழே விழும் மரங்களில் உருவாகும் சில பாக்டீரியாக்களை பறவைகள் உணவாக எடுத்துக்கொள்ளும். பறவைகள் அமர்ந்து ஓய்வு எடுக்கும்.மரங்களை வெட்டி கடத்தினாலும், கீழே கிடந்த மரத்தை வெட்டினாலும் அது வனப்பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றம். இவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்மக்கள் இதுபோன்று சம்பவம் நடந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். வனத்துறையினர் வனப்பகுதியில் அந்நியர்கள் நடமாட்டம், மரம் வெட்டி கடத்தும் கும்பல், வேட்டை கும்பல் நடமாட்டம் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.முள்ளி, கோபனாரி என இரு வனச்சோதனை சாவடிகள் உள்ளன. மாவோயிஸ்ட் நடமாட்டம் தொடர்பாக இச்சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பலத்தப்பட்டு வாகன தணிக்கை நடக்கிறது. தற்போது மரம் கடத்தல் தொடர்பாக இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு, வாகனங்களின் எண்கள், வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.-----
27-Feb-2025