வீடுகளை காலி செய்யாத மாஜி ஊழியர்கள் பூட்டை உடைத்து பொருட்கள் அகற்றம்
வால்பாறை: வால்பாறையில், நகராட்சி குடியிருப்புகளை காலி செய்ய மாஜி ஊழியர்கள் மறுத்ததால், வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் அகற்றப்பட்டது.வால்பாறை நகராட்சி அலுவலகத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நகராட்சிக்கு சொந்தமான நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. இதில் துாய்மை பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் வசிக்கின்றனர்.இந்நிலையில், நகராட்சியில் கடந்த காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, நகராட்சி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பல ஆண்டுகளான நிலையிலும், வீட்டை காலி செய்யாமல் உள்ளனர்.இதனால், நகராட்சியில் வெளியூர்களிலிருந்து வந்து பணிபுரியும் ஊழியர்கள், வீடு கிடைக்காமல் தவிக்கின்றனர். நகராட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வசிக்கும் வீடுகளை, காலி செய்து, எங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என, ஊழியர்கள் கமிஷனரிடம் கேட்டுள்ளனர்.அதன் அடிப்படையில், நகராட்சி கமிஷனர் ரகுராமன் உத்தரவின் பேரில், நீண்ட நாட்களாக காலி செய்யாமல் பூட்டியே கிடந்த நகராட்சிக்கு சொந்தமான வீடுகளின் பூட்டை அதிகாரிகள் நேற்று காலையில் உடைத்தனர். வீட்டினுள் இருந்த பொருட்களை வெளியே எடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை நகராட்சியில், கடந்த பல ஆண்டுகளாக காலி செய்யாமல் உள்ள வீடுகளை சம்பந்தப்பட்டவர்கள், 15 நாட்களுக்குள் காலி செய்யவேண்டும், என, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 16 வீடுகளில் நகராட்சியில் தற்காலிகமாக பணியாற்றியவர்கள் வசித்து வருகின்றனர்.முதல் கட்டமாக, இரண்டு வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் காலி செய்யாவிட்டால் அவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்.இவ்வாறு, கூறினர்.