நல்ல மனிதர்களை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு உருவாக்குகிறது முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பேச்சு
பெ.நா.பாளையம்;தேசபக்தியுடன், சுயநலம் இல்லாமல், அனைவருடன் அன்பாக பழக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நல்ல மனிதர்களை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு உருவாக்குகிறது என, மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பேசினார். நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி விஜயதசமி விழா நடந்தது. நிகழ்ச்சியில், மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பேசுகையில், ஹிந்து சமுதாயம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அவர்கள் தினமும் சந்திக்க வேண்டும். சுயநலம் இல்லாமல் வாழ வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) அமைப்பு. இந்த அமைப்பு நல்ல மனிதர்களை உருவாக்குவதோடு, உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. நாட்டில் எமர்ஜென்சி காலத்தில், அதை எதிர்த்து போராடிய இயக்கம். ஆர்.எஸ்.எஸ்., எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் திறன் பெற்றது. ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழாவையொட்டி இந்த ஆண்டு தமிழகத்தில், 50 லட்சம் பேரை நேரடியாக சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அ மைப்பு பெண்களை தெய்வமாக மதிக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறது. குழந்தைகளுக்கு நாம் மகாபாரதம், ராமாயணம், விநாயகர் அகவல், ஆழ்வார்கள் ஆகியோரை குறித்து கற்றுத் தர வேண்டும், என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் பூபதி, மேட்டுப்பாளையம் வட்டார ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி சுசீந்திரன், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.