முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை விழா
கோவை: கோவையில், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் எட்டாம் ஆண்டு மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.கோவை போலீசார் பயிற்சி பள்ளி வளாக கலையரங்கில் நடந்த விழாவில், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''போலீசார் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். பணியிலுள்ள போலீசாரின் வாரிசுகளுக்கு, இந்த அறக்கட்டளை உதவி வருவது பாராட்டுக்குரியது,'' என்றார்.'சக்தி மசாலா' நிறுவனர் துரைசாமி பேசுகையில், ''காவல் துறையில் சேர இருமுறை முயற்சித்தும் முடியாமல், தொழிலதிபராகினேன். இந்த அறக்கட்டளையின் உதவிகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.நடிகர் சிவக்குமார் பேசுகையில், ''அனைவரும் அறவழியில் செயல்பட வேண்டும். கோவையில் மட்டும் செயல்படும் இந்த அறக்கட்டளையை முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 25 பேருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. முன்னதாக அறக்கட்டளை தலைவர் ரத்தினம் வரவேற்று, அறக்கட்டளையின் செயல்பாடுகளை விளக்கினார். போலீசார் மற்றும் குடும்பத்தார் பங்கேற்றனர்.