அரசு கல்லுாரி மாணவர்கள் நால்வர் நெட் தேர்வில் பாஸ்
கோவை; கோவை அரசு கலை கல்லுாரியின் ஆங்கிலத்துறையின், நான்கு மாணவர்கள் நெட்., எனப்படும், தேசிய தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ளனர். இக்கல்லுாரியில், 2023-25ம் ஆண்டு முதுகலை ஆங்கிலம் படித்த மாணவர்களுக்கு இணைய வழியில், வார இறுதி நாட்களில், நெட்., தேர்வுக்காக இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. 25 பயிற்சி தேர்வுகள், 5 முழு மாதிரி பயிற்சி தேர்வுகள் நடத்தப்பட்டன. இப்பயிற்சியில், 11 மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த ஜூனில் நடந்த தேர்வில், 10 பேர் தேர்வுகளை எழுதினர். நெட் தேர்வு முடிவுகள், 22ம் தேதி வெளியானது. இதில், மாணவர்கள் யமுனா, மகேஷ்குமார், கவுதம், திவ்யதர்ஷினி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை, கல்லுாரி முதல்வர் எழிலி, பயிற்சி அளித்த பேராசிரியர்கள் சுப்பிரமணியன், அனுராதா, உசேன் உள்ளிட்டோர் பாராட்டினர்.