| ADDED : நவ 23, 2025 06:34 AM
கோவை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவை மாநகர போலீசாருக்கு, கடந்த, 15ம் தேதி, ஏழு பிங்க் ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டன. நேற்று ஒரே நாளில் இரு சிறுமிகள், மூதாட்டிகள் என, நான்கு பேரை போலீசார் மீட்டுள்ளனர். குப்பனுார் அரசு பள்ளி காப்பகத்தில் தங்கியிருந்த இரு மாணவியர், அங்கு தங்க பிடிக்கவில்லை எனத் தெரிவித்து, இரவு அங்கிருந்து வெளியேறினர். கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே, இரு சிறுமியரும் நடந்து சென்ற போது, அவர்களை பார்த்த பிங்க் ரோந்து வாகன போலீசார் அவர்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். * போத்தனுார் செட்டிபாளையம் ரோட்டில், 85 வயது மூதாட்டி தனியாக இருப்பதாக இரவு, 9.00 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிங்க் ரோந்து வாகன போலீசார் மூதாட்டியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதேபோல், ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருந்த, 70 வயது மூதாட்டியை மீட்ட போலீசார், அவரது மகனிடம் ஒப்படைத்தனர்.