குடிநீர் வினியோகத்தில் ஓரவஞ்சனை; பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதில் பேரூராட்சி நிர்வாகம், ஓரவஞ்சனையாக நடந்து கொள்கிறது என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், 35 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு, 18 லட்சம் லிட்டர் பில்லூர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.ஆனாலும் சமீப காலமாக பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பில்லூர் குடிநீர் வினியோகம் செய்வதில் குளறுபடிகள் ஏற்படுகின்றன. நேற்று பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, 4வது வார்டு ஜோதிபுரம் மற்றும் பட்டக்காரர் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டுமே பில்லூர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், பேரூராட்சி தலைவர் வசிக்கும் கஸ்தூரிபாளையம் பகுதியில், ஒரு நாள் விட்டு ஒரு நாள், மூன்று மணி நேரம் பில்லூர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பில்லூர் குடிநீர் விநியோகம் செய்வதில் பேரூராட்சி நிர்வாகம் ஓரவஞ்சனையாக நடந்து கொள்கிறது என, புகார் தெரிவித்தனர்.இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம் கூறுகையில், தற்போது பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு, நாளொன்றுக்கு, 18 லட்சம் லிட்டர் பில்லூர் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. அது பாதியாக குறைக்கப்பட்டு விட்டது. கிடைக்கும் பில்லூர் குடிநீர், அனைத்து வார்டுகளுக்கும், பாரபட்சம் இன்றி விநியோகம் செய்யப்படுகிறது. பில்லூர் குடிநீர் குடிக்க மட்டும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். துவைக்க உள்ளிட்ட பிற தேவைகளுக்கு, ஆழ்குழாய் தண்ணீர் அனைத்து வார்டுகளுக்கும் போதுமான அளவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.