உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் சந்தையில் சேகரிக்கப்படும் 1.5 டன் காய்கறி கழிவுகள்  உரமாக்கி இலவசமாக விநியோகம் 

உழவர் சந்தையில் சேகரிக்கப்படும் 1.5 டன் காய்கறி கழிவுகள்  உரமாக்கி இலவசமாக விநியோகம் 

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் தினந்தோறும் 1 முதல் 1.5 டன் வரை காய்கறி கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரமாக்கும் செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்வதாக உர மையத்தின் பொறுப்பாளர் லட்சுமி தெரிவித்தார். ஆர்.எஸ்.புரம் சாலையில் உழவர் சந்தை தினந்தோறும் காலை, 6:00 மணி முதல் 11:00 மணி வரை செயல்படுகிறது. 170 கடைகள் இங்கு உள்ளன; பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நேரடியாக வந்து தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்கின்றனர். காய்கறி கழிவுகளை உரமாக மாற்றும் வகையில் உழவர் சந்தை வளாகத்திலேயே, இயற்கை உரமாக்கும் மையம் கடந்த, 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இம்மையம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. தினந்தோறும், உழவர் சந்தை நேரம் முடிந்த பின்னர் ஊழியர்கள் காய்கறி கழிவுகளை சேகரித்து, அதற்கான செயல்பாடுகளை துவக்கி விடுகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் உரங்கள், முழுமையான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது என்பதால், அனைவரும் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். விவசாயிகள் உழவர் அட்டை அல்லது பட்டா, சிட்டா காண்பித்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை 2 முதல் 3.5 டன் உரத்தை இலவசமாக பெறலாம். பொதுமக்கள் மாடி தோட்டம், வீடுகளில் உள்ள மரங்களுக்கு தேவைப்படும் உரத்தை ஆதார் காண்பித்து, 3 முதல் ஐந்து கிலோ வீதம் ஒரு மாதத்திற்கு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இதுகுறித்து, இயற்கை உர மைய பொறுப்பாளர் லட்சுமி கூறுகையில், '' காய்கறி கழிவுகள் உரமாக மாற்ற, 48 நாட்கள் எடுத்துக்கொள்கின்றோம். ஒரு டன் கழிவுகளில் இருந்து, 200 கிலோ உரம் மட்டுமே கிடைக்கும். மேலும், இந்த மையத்தில் துர்நாற்றம் என்பது இருக்காது. கொசு, ஈ போன்ற பிரச்னைகளும் இருக்காது. உரங்களை தேவைப்படுபவர்களின் விபரங்கள் பெற்று இலவசமாக வழங்கி வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ