அடிக்கடி சர்வர் பிரச்னை; பத்திரப்பதிவு பாதிப்பு நாள் முழுக்க காத்திருந்து மக்கள் ஏமாற்றம்
கிணத்துக்கடவு,:கிணத்துக்கடவு சார்-பதிவாளர் அலுவலகத்தில், சர்வர் பிரச்னையால் மீண்டும் பத்திரப்பதிவு பாதிப்பு ஏற்பட்டது. கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், கிணத்துக்கடவு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்வது அதிகரித்துள்ளது. சார்-பதிவாளர் எல்லைக்கு உட்பட்ட 27 கிராமங்களுக்கு இங்கு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. தற்போது, சார்-பதிவாளர் அலுவலகத்தில் தினமும், 70 முதல் 90 டோக்கன்களும், முகூர்த்த நாட்களில், 100 முதல் 150 டோக்கன்கள் வரை வழங்கப்படுகிறது. இதில், அவ்வப்போது 'சர்வர்' பிரச்னையால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம், 'சர்வர்' பிரச்னையால் பத்திரப்பவு தடை பட்டது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று சர்வர் பிரச்னையால் பத்திரப்பதிவு பணிகள் பாதித்து, நிலம் விற்க வந்தோரும், நிலம் வாங்க வந்தோரும் அலுவலகத்தின் வெளியில் நீண்ட நேரம் காத்திருந்தனர். மக்கள் கூறியதாவது: பத்திரப்பதிவு செய்ய காலை முதல் காத்திருக்கிறோம். பல மணி நேரமாகியும் 'சர்வர்' பிரச்னை சரியாகாததால், பத்திரப்பதிவு செய்ய முடியாமல் போனது. மேலும், இங்கு பத்திரப்பதிவு செய்ய வருவோர் அனைவரும், ஒரு நாள் வேலையை விட்டு காத்திருக்கிறோம். ஆனால் பத்திரங்கள் பதிவு செய்ய முடியாதது வருத்தம் அளிக்கிறது. சிலர் இதை அபசகுணமாக கருதி வேறு நாளில் பத்திரப்பதிவுக்கு திட்டமிடும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு, கூறினர். பத்திர எழுத்தர் ஒருவர் கூறியதாவது: கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று காலை முதலே 'சர்வர்' முடங்கியதால், அன்று எந்த பத்திரமும் பதிவு செய்யவில்லை. இதனால், பத்திரப்பதிவுக்கு வந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மற்ற நாட்களிலும் 'சர்வர்' அடிக்கடி முடங்கியது. இதனால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருந்து பத்திரப்பதிவு செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில், நேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட டோக்கன்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், காலை முதலே 'சர்வர்' முடங்கியது. இதனால், 'சீனியர் சிட்டிசன்கள்' உட்பட பொதுமக்கள் பலர் காத்திருந்தனர். பத்திரப்பதிவை எளிதாக்க சர்வரை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். பத்திரப்பதிவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இன்று, 6ம் தேதி (நேற்று) காலை, 11:00 மணியளவில், பத்திரப்பதிவு செய்யும் இணையபக்கம் 'சர்வர்' பிரச்னையால் முடங்கியது. ஏற்கனவே பலமுறை இவ்வாறு நடந்துள்ளது. இணையபக்கத்தில், 'அண்டர் மெயின்டனன்ஸ்' என இருப்பதால், 'சர்வர்' பிரச்னையா அல்லது இணையபக்கம் மேம்படுத்தப்படுகிறதா என்பது தெரியவில்லை. மேலும், பத்திரப்பதிவு செய்யும் இணையபக்கம் பிரச்னை குறித்து முன்கூட்டியே எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு, கூறினார்.