உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேடிக்கையே வாடிக்கை! உயர்மட்ட பாலம் கட்டுவதில் மெத்தனம்: மக்கள் மீது அக்கறையில்லா அதிகாரிகள்

 வேடிக்கையே வாடிக்கை! உயர்மட்ட பாலம் கட்டுவதில் மெத்தனம்: மக்கள் மீது அக்கறையில்லா அதிகாரிகள்

மேட்டுப்பாளையம்: காந்தையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டாமல், வேடிக்கை பார்க்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து, விவசாயிகள், மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சிறுமுகை பேரூராட்சியில் காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர் உட்பட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. காந்தவயலுக்கும், லிங்காபுரத்துக்கும் இடையே காந்தையாறு பயணிக்கிறது. ஆற்றில் நீர் தேங்கியிருந்தால், மலைவாழ் மக்கள் பரிசலில் பயணிப்பது வழக்கம். ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட, ரூ.15.40 கோடி நிதியை, தமிழக அரசு ஒதுக்கி, இரு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. கடந்த 2023 பிப்., மாதம், பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. பணிகளில் போதிய வேகம் இல்லாததால், மூன்று ஆண்டுகளில் ஆற்றின் குறுக்கே ஐந்து பில்லர்களும், இரு இடங்களில் பாலத்தின் மீது சாலையும் அமைத்துள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் பெய்த மழையால், பவானிசாகர் அணையில், 102 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் தேக்க நீர், காந்தையாற்றில் 30 அடிக்கு தேங்கியதால், ஆறு மாதங்களாக, மக்கள் பரிசலில் பயணித்தனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தொடர் குரல்கள் எழுந்து வருகின்றன. ஏதோ கடனுக்கு காந்தவயல் விவசாயி ரத்தினசாமி மற்றும் மலைவாழ் மக்கள் கூறியதாவது: காந்தையாற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் மெதுவாக நடத்தப்பட்டன. பணிகள் துவங்கி மூன்றாண்டுகளாகியும் இதுவரை பாதியளவு பணிகள் கூட நடத்தப்படவில்லை. ஆற்றின் குறுக்கே இருந்த சாலையையும் இடித்து விட்டதால், ஆறு மாதங்கள் பரிசலில் பயணம் செய்து வந்தோம். தற்போது ஆற்றில் நீர் குறைந்துள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அதிக ஆட்களை வைத்து, பாலம் கட்டும் பணிகளை துவக்கியிருக்க வேண்டும். ஆனால், ஒரு மாதமாக எவ்வித பணிகளும் துவங்கவில்லை. இரு நாட்களுக்கு முன் பணிகளை துவக்கி உள்ளனர். ஒரு டிப்பர் லாரியும், மண் அள்ளும் வாகனமும் வைத்து பணிபுரிந்து வருகின்றனர். ஒரு முறை டிப்பர் லாரி மண்ணை எடுத்து சென்று கொட்டி வர, 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. அதுவரை, மண் அள்ளும் வாகனம் வெறுமனே நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று லாரிகள் இருந்தால், அடுத்தடுத்து பணிகள் வேகமாக நடத்தப்படும். இந்த வேலைகளை பார்த்தால், ஏதோ கடனுக்கு செய்வது போல் தெரிகிறது. மே அல்லது ஜூன் மாதத்தில், பருவமழை பெய்யத் துவங்கி விடும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மீண்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து விடும். அணையின் நீர்த்தேக்க நீர், காந்தையாற்றில் தேங்கினால், பாலம் கட்டும் பணிகள் மீண்டும் பாதிக்கப்படும். விரைவில் போராட்டம் ஆற்றில் நீர் குறைந்து ஒரு மாதமாகிறது. இந்த நாட்களில் பாலத்தின் மீது கைப்பிடிச்சவர் கட்டி இருக்கலாம். சாலையின் இரு பக்கம் மண்ணை கொட்டி அகலப்படுத்தி இருக்கலாம். எந்த பணிகளுமே செய்யாமல், அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கும் தான் பெரும் பாதிப்பு. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து, விவசாயிகள், மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் முன், விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை