உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 77 ஆயிரம் மாணவர்களுக்கு ரேங்க் கார்டு வழங்க நிதி

77 ஆயிரம் மாணவர்களுக்கு ரேங்க் கார்டு வழங்க நிதி

கோவை;கோவை மாவட்டத்தில், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 77 ஆயிரத்து 403 பேருக்கு, ரேங்க் கார்டு வழங்க, 3 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தொடக்க வகுப்பு மாணவர்களின், கற்றல்திறனை மேம்படுத்த, எண்ணும் எழுத்தும் சிலபஸ் அடிப்படையில், வகுப்புகள் கையாளப்படுகின்றன.இதில், வீட்டுப்பாடங்களோ, எழுத்துப்பயிற்சியோ குறைவாக இருப்பதால், பெற்றோர் மத்தியில் அதிருப்தி எழுந்தது. எழுத்துத்தேர்வுக்கு முக்கியத்துவம் அளித்து, மாணவர்களின் கற்றல் நிலையை மதிப்பீடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்தது.இதனால் நடப்பாண்டில், மூன்று பருவங்களுக்கும் சேர்த்து, ரேங்க் கார்டு தயாரிக்கவும், முதல் இரு பருவங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை குறிப்பிட்டு, பெற்றோரிடம் காண்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 77 ஆயிரத்து 403 மாணவர்களுக்கு, ரேங்க் கார்டு அச்சிட, 3 லட்சத்து 87 ஆயிரத்து 15 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாதிரி ரேங்க் கார்டு வெளியிடப்பட்டு, இந்நடைமுறைப்படி அச்சிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாதிரி ரேங்க் கார்டு பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளோம். இதில், மாணவர்களின் விபரங்களை குறிப்பிட்டு, விரைவில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி, மாணவர்களின் கற்றல் நிலையை விளக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ