விநாயகர் சிலைகள் ஊர்வலம்; சாலைகளை சீரமைக்க வேண்டும்
மேட்டுப்பாளையம்; விநாயகர் சிலைகள் ஊர்வலம் வரும் சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும், என, அரசு அதிகாரிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து, அனைத்து அரசு துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் ராம்ராஜ் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன், சிறுமுகை இன்ஸ்பெக்டர் நிர்மலா, தலைமை இட துணை தாசில்தார் ரேவதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆலோசனைக்கு பின், விநாயகர் சிலைகள் ஊர்வலம் வரும் சாலைகளை நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் சீரமைக்க வேண்டும். சுப்ரமணியர் கோவில் பின்புறம் சப்ப வஞ் பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கும் இடத்தில், தற்காலிகமாக அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகளையும் சிலைகள் ஊர்வலம் வரும் சாலையில் உள்ள எரியாத மின்விளக்குகளையும் நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும். சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.