உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை சேகரிப்பு பணியை துவங்குவது மீண்டும் காலை 7:00 மணிக்கு மாற்றம்

குப்பை சேகரிப்பு பணியை துவங்குவது மீண்டும் காலை 7:00 மணிக்கு மாற்றம்

கோவை; மாநகராட்சி பகுதிகளில் குப்பை சேகரிப்பு பணிக்கான நேரம் காலை 6 மணியில் இருந்து 7 மணியாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், துாய்மை பணியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கோவை மாநகராட்சியில், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 500 டிரைவர், கிளீனர்கள் உள்ளனர். தவிர, 2,000 நிரந்தர துாய்மை பணியாளர்கள் உள்ளனர். குப்பை சேகரிப்பு பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு அதிகாலை 5:45 முதல், 6:15 மணி வரை பணி வருகைநேரமாக நிர்ணயம் செய்யப்பட்டது. அவர்கள் உக்கடம், வி.எச். ரோடு, காந்திபுரம் என நகரின் மையத்தில் வசித்ததால் சிரமம் இல்லாமல் குறித்த நேரத்தில் ஆஜராகி வேலை செய்தனர். வெள்ளலுார், மலுமிச்சம்பட்டி, கோவைப்புதுார், கீரணத்தம் என, நகருக்கு வெளியே குடியிருப்புகள் கட்டி துாய்மை பணியாளர்களை குடியமர்த்திய பிறகு, உரிய நேரத்தில் நகருக்குள் வந்து வேலை செய்ய சிரமப்பட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, வருகை நேரத்தை காலை 7 மணிக்கு மாற்றி, முந்தைய கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கடந்த மாதம் அது 6 மணியாக மாற்றப்பட்டது. பணியாளர்கள் மீண்டும் பிரச்னைக்கு ஆளானார்கள். ஒருதலைபட்சமான நேர மாற்றம் என்று கூறி, ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் வழக்கு தொடர்ந்தது. அதுபற்றி, கோயம்புத்துார் லேபர் யூனியன் செயலாளர் செல்வராஜ் கூறுகையில்,''காலை 6 மணி என வேலை நேரம் மாற்றப்பட்ட மாநகராட்சி உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இரு வாரங்களுக்குள் பதிலளிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. மறு அறிவிப்பு வரும் வரை துாய்மை பணியாளர்கையொப்பமிடும் நேரம் 7 மணி என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது நிம்மதி அளிக்கிறது,'' என்றார்.

அதிகாலை 3:00 மணிக்கு

எழுந்து வர வேண்டுமா?

துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: காலை 6 மணிக்கு வேலை தொடங்கினால், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் நல்லது என்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால், ஊருக்கு வெளியே வசிக்கும் நாங்கள் இங்கே வந்து 6 மணிக்கே கையெழுத்திட வேண்டும் என்றால், அதிகாலை 3 மணிக்கே எழுந்து வீட்டு வேலைகள் செய்து, பள்ளி செல்லும் குழந்தைகளை தயார்படுத்தி புறப்பட வேண்டியுள்ளது. இதனால் எங்களுக்கும் குழந்தைகளுக்கும் சிரமம். அவசர அவசரமாக வேலைக்கு வரும்போது, எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, 7 மணி வரை பதிவேட்டில் கையெழுத்திடலாம் என்கிற நடைமுறையை மாநகராட்சி நிரந்தரமாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை