உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பை; வாகன ஓட்டுநர்கள் அவதி

தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பை; வாகன ஓட்டுநர்கள் அவதி

குறுக்கு பட்டையால் தொல்லை

பொள்ளாச்சி ---- கோவை ரோட்டில், வடக்கிபாளையம் பிரிவு பகுதியில் அதிகளவு மஞ்சள் நிற குறுக்கு பட்டைகள் அமைக்கப்பட்டிருப்பதால், பைக் ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். எனவே, இதை நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும்.- பிரபு, பொள்ளாச்சி.

ரோட்டோரத்தில் குப்பை

பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், அரசம்பாளையம் பிரிவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது, குப்பை காற்றுக்கு பறந்து விழுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி குப்பையை அகற்றம் செய்ய வேண்டும்.- கோகுல், கிணத்துக்கடவு.

கால்வாயில் புதர்

பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் கழிவு நீர் கால்வாயில் அதிக அளவு புதர் சூழ்ந்து உள்ளது. இதனால், கழிவுநீர் செல்வதிலும் தூய்மைப்படுத்துவதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே, நகராட்சி சார்பில் உடனடியாக கால்வாயை துார்வாரி, அங்கு சூழ்ந்துள்ள புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- பெருமாள், பொள்ளாச்சி.

போக்குவரத்து பாதிப்பு

உடுமலை பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பைபாஸ் ரோட்டில், வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே, விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.

வேகத்தடை அமைக்கணும்!

கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை சிறியதாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் வேகமாக செல்கின்றனர். இதனால், விபத்து அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, கூடுதல் வேகத்தடை அமைக்க வேண்டும்.-- மாணிக்கம், கிணத்துக்கடவு.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் அப்பகுதியில் பஸ்சுக்கு காத்திருப்பதற்கும், உள்ளே செல்வதற்கும் இடையூராக உள்ளது. மேலும், பஸ் வந்தவுடன் பயணிகள் விரைவில் வர முடியாத வகையில் வாகனங்கள் இடையில் நிறுத்தப்பட்டிருப்பதால் சிரமப்படுகின்றனர்.- சித்ரா, மடத்துக்குளம்.

தெருநாய்கள் தொல்லை

உடுமலை, தாராபுரம் ரோடு ஸ்டேட் பேங்க் காலனியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. ரோட்டில் நடக்கும் பொதுமக்களை துரத்தி சென்று அச்சுறுத்துவதால் தடுமாறி விழுகின்றனர். இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்துவதால் விபத்துக்குள்ளாகின்றனர்.- விஷ்ணுபிரசாத், உடுமலை.

சுகாதாரம் பாதிப்பு

உடுமலை அனுஷம் ரோடு - ஐஸ்வர்யா நகர் செல்லும் ரோடு சந்திப்பில், சாக்கடை கால்வாயிலிருந்து கழிவுகள் எடுக்கப்பட்டு வெளியே கொட்டப்பட்டுள்ளது. இவை அகற்றப்படாததால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அவற்றை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சோமு, உடுமலை.

ரோடு சேதம்

உடுமலை, தென்னைமரத்து வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். முதியோர் ரோட்டில் நடப்பதற்கும் முடியாமல் சிரமப்படுகின்றனர். குண்டு குழி ரோட்டை சீரமைக்க எதிர்பார்த்துள்ளனர்.- சாய்சரிதா, உடுமலை.

சுகாதார சீர்கேடு

உடுமலை, வாளவாடி சந்தை வளாகம் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் உரம் தயாரிப்பதற்கு மாற்றாக குப்பைக்கழிவுகளை திறந்த வெளியில் குவிப்பதால் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.- வசந்தி, பெரியவாளவாடி.

துர்நாற்றம் வீசுது

உடுமலை, பொள்ளாச்சி ரோட்டில் மின்மயானம் சுற்றுச்சுவர் அருகே இறைச்சி கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இதனால் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தெருநாய்களும் அப்பகுதியில் அதிகரித்துள்ளது. அங்கு கழிவுகள் கொட்டுவதை சுகாதாரத்துறையினர் தடுக்க வேண்டும்.- காயத்ரி, உடுமலை.

பகலில் ஒளிரும் தெருவிளக்கு

கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் செல்லும் வழியில், பகல் நேரத்தில் தெரு விளக்கு எரிந்த படி உள்ளது. இதனால், மின் ஆற்றல் வீணாகிறது. மேலும், பல்ப் விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளது. எனவே, இதை ஊராட்சி நிர்வாகம் கவனித்து, உடனடியாக சரி செய்ய வேண்டும்.- சந்தோஷ், நல்லட்டிபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ