பூண்டு விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் உள்ள பூண்டு மண்டிகளில் வெள்ளைப் பூண்டு ஏலம் நேற்று நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும், வடமாநில வியாபாரிகளும் பங்கேற்றனர். இது குறித்து மேட்டுப்பாளையம் பூண்டு மண்டிகளின் உரிமையாளர் சங்கத் தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: இன்று (நேற்று) நடந்த ஏலத்திற்கு, 55,000 மூட்டைகளில், 2200 டன் வெள்ளைப் பூண்டுகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். நீலகிரி மாவட்ட வெள்ளைப் பூண்டை விதைக்கு மட்டுமே, வெளி மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். அதிகளவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள், ஏலத்தில் பங்கேற்றனர். ஒரு கிலோ பூண்டு குறைந்தபட்சம், 60 ரூபாய்க்கும், முதல் தரமான பூண்டுகள் அதிகபட்சம், 200 ரூபாய்க்கும் ஏலம் போனது. இது கடந்த வாரத்தை விட, இந்த வாரம் ஒரு கிலோவுக்கு, 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூண்டு அறுவடையானது அக்டோபர் மாதம் வரை நடைபெறும். வரும் வாரங்களில் விலை உயர வாய் ப்பு உள்ளது. இவ்வாறு தலைவர் கூறினார். இதுகுறித்து ஊட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கரில், 800 கிலோ வெள்ளைப் பூண்டை நடவு செய்கிறோம். நடவு செய்த, 100 நாட்களில் அறுவடை நடைபெறும். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை, நடவு முதல் அறுவடை வரை செலவு ஆகும். மழை பெய்து கொண்டே இருந்தால் ஒரு ஏக்கருக்கு ஆறு டன் வெள்ளை பூண்டு மகசூல் மட்டுமே கிடைக்கும். வெயில் காலத்தில் , 10 டன் வரை பூண்டு மகசூல் கிடைக்கும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.