| ADDED : ஜன 30, 2024 10:19 PM
அன்னுார்;ஐந்தரை கோடி ரூபாயில் கட்டப்பட்டு, சில மாதங்களாக முடங்கிக் கிடந்த வணிக வளாகம் பயன்பாட்டுக்கு விடப்படுவதாக பேரூராட்சி அறிவித்துள்ளது.அன்னுார் ஓதிமலை ரோட்டில், 28 கடைகளும், வார சந்தை வளாகத்தில், 28 கடைகளும், நான்கு கொட்டகைகளும், ஐந்தரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டன. ஒன்றரை ஆண்டில் முடிய வேண்டிய பணி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைந்தது.பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஒன்றரை மாதத்திற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இந்த வணிக வளாகத்தை திறந்து வைத்தார். அதன் பிறகும் வாடகைக்கு விடப்படவில்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் பேரூராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வாடகை இழப்பு ஏற்படுகிறது என புகார் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் அன்னுார் பேரூராட்சி நிர்வாகம் வாடகைக்கு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது குறித்து பேரூராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,' வருகிற 5ம் தேதி ஓதிமலை ரோட்டில் உள்ள 28 கடைகளை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள ஏலம் நடைபெறுகிறது. மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நான்கு கடைகளை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள அதே நாளில் ஏலம் நடைபெறுகிறது.ஏல நிபந்தனைகளை பேரூராட்சி அலுவலகத்தில் வேலை நாட்களில் வேலை நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்,' என தெரிவித்துள்ளது.நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வணிக வளாகம் தற்போது முடிவடைந்து பயன்பாட்டுக்கு வருவதால், பேரூராட்சிக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும்.வளர்ச்சி பணிகளை கூடுதலாக செய்ய முடியும் என பேரூராட்சி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.