மேலும் செய்திகள்
மண் வீடு கான்கிரீட் வீடாகிறது
11-Sep-2025
பொள்ளாச்சி:குடிசை வீட்டில் வசித்த பழங்குடியின மக்களுக்கு, புதிதாக கான்கிரீட் வீடு கட்டி ஒப்படைக்கப்பட்டது. பொள்ளாச்சி அருகே, ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் கடந்த, 1975ம் ஆண்டில் இருந்து யானைகள் முகாம், பயிற்சி மற்றும் யானை பாதுகாப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. கோழிகமுத்தி, வரகளியாறு யானை முகாம்களில் மொத்தம், 24 யானைகளுக்கு பயிற்சி அளித்து பராமரிக்கப்படுகின்றன. யானைகளின் வயது, எடை மற்றும் செயலுக்கு தகுந்தவாறு கால்நடை டாக்டரின் பரிந்துரை படி உணவு வழங்கப்படுகிறது. யானைகளை பராமரிக்கும் பாகன் குடும்பத்தினர், கோழிகமுத்தி யானைகள் முகாமில் குடிசை மற்றும் தகரத்திலான வீடுகளில் வசித்து வந்தனர். இந்நிலையில், யானை பாகன்களின், 47 குடும்பங்களுக்கு, 5.4 கோடி ரூபாய் மதிப்பில், கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகளுக்கு சோலார் மின்சாரம், 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. கோழிகமுத்தி யானை முகாம், 5 கோடி ரூபாய் நிதியில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று, பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதையடுத்து, சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி மற்றும் வனத்துறையினர், வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்தனர். பழங்குடியின மக்கள் கூறுகையில், 'பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்து இங்கேயே வசிக்கிறோம். தலைமுறை, தலைமுறையாக யானை பராமரிப்பில் ஈடுபட்டிருக்கிறோம். குடிசை வீட்டுல வாழ்ந்த எங்களுக்கு, கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது பல ஆண்டு கோரிக்கையை ஏற்று அரசு சலுகை அளித்து, வீடு கட்டிக்கொடுத்து மனதுக்கு சந்தோஷம் அளிக்கிறது.அதே போல, இப்பகுதிக்கு குடிநீர், மின்சாரம், சமுதாய நலக்கூடம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதற்கும் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,' என்றனர். நடவடிக்கை உறுதி சப் - கலெக்டர் கூறுகையில், ''டாப்சிலிப் யானை பாகன்களுக்கு வீடுகள் கட்டி பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும், கூமாட்டி மற்றும் மற்ற பழங்குடியின மக்களுக்கு தாட்கோ மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடுகள் கட்டப்படுகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், பழங்குடியின மக்களுக்கு மின்வசதி, தார்ரோடு உள்ளிட்டவைக்கு அனுமதி பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
டாப்சிலிப் கோழிகமுத்தியில், யானை பாகன்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இதனால், மகிழ்ச்சியடைந்த யானை பாகன்கள், யானைகளின் பெயர்களை ஒவ்வொரு தெருவுக்கும் வைத்துள்ளனர். மொத்தம் உள்ள ஏழு தெருக்களுக்கும், யானைகள் கலீம், ரஞ்சன், ஐ.ஜி., பாண்டியன், கல்பனா, வள்ளி, வல்லவன் ஆகியவற்றின் பெயர்களை வைத்து, நன்றி செலுத்தியுள்ளனர்.
11-Sep-2025