தேவாலயங்களில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள்
மேட்டுப்பாளையம்: கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு, பெரிய சிலுவை பாதை வழிபாடுகள் நடந்தன. மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேவாலயத்தில், நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு, பெரிய சிலுவை பாதை நிகழ்வு நடந்தது. முன்னதாக நற்கருணை ஆராதனையை அன்பிய குடும்பத்தினர் சிறப்பித்தனர். பின்பு பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ், சிலுவை பாதை பவனியை துவக்கி வைத்தார். தேவாலயத்தை சுற்றி மக்கள் கையில் சிலுவையை தூக்கி பிடித்தபடி, பாடல் பாடி வந்தனர். ரட்சகர் சபை பாதிரியார் லூயிஸ், சிலுவைப் பாதை வழிபாட்டை, ஒலி, ஒளி காட்சி வாயிலாக நடத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். வின்சென்ட் தே பவுல் சபையினர், கிறிஸ்தவ மக்களுக்கு நீர்மோர் வழங்கினர். இதேபோன்று மேட்டுப்பாளையம் காட்டூர் புனித ஜோசப் தேவாலயத்தில், புனித வெள்ளி நிகழ்வு நடந்தது. இயேசுவின் சிலுவை பாதை பாடுகளை, இளைஞர்கள் தத்ரூபமாக, நடித்து காட்டினர். இந்த நிகழ்வில் பங்கு பாதிரியார் ஆண்டோ ராயப்பன் மற்றும் நிர்வாக கமிட்டி நிர்வாகிகள், கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், சிவன்புரத்தில் உள்ள, அற்புத கெபி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், புனித வெள்ளியை முன்னிட்டு, பெரிய சிலுவை பாதை வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.