மக்களிடம் வரவேற்பு பெற்ற பதிவு தபால் சேவைக்கு சுபம்
ஆ ங்கிலேயர் காலம் தொட்டு இன்று வரை, மக்களுக்கு சேவை செய்து வருவதில் தபால் துறை பங்கு முக்கியமானது. ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப, தபால் துறையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. எக்ஸ்பிரஸ் பார்சல் சேவை, சாதாரண தபாலில், அதற்கென கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு செயல்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் டெலிவரி, ஒரே நாளில் உள்ளூரில் தபால் விநியோகிக்க, கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட சூப்பர் மெயில் சர்வீஸ் ஆகியவை, பிரபலமாக இருந்தன. இவை காலமாற்றத்துக்கு ஏற்ப நிறுத்தப்பட்டன. தபால் துறையில் குறிப்பிடத்தக்க அளவில், பரவலாக பாராட்டு பெற்று வந்த பதிவு தபால் சேவை, தற்போது விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1849 நவ.1ல் அறிமுகப்படுத்தப்பட்டு, நீதிமன்றம், வங்கி மற்றும் அரசு துறை சார்ந்த கடிதங்கள், பதிவு தபால் வாயிலாக பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வந்தன. ஆவணங்கள், சான்றுகள் அனுப்பும்போது, வாடிக்கையாளர்களின் முதல்தேர்வாக பதிவு தபால்களே இருந்தன. இச்சேவை விரைவு தபாலுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், கால மாற்றத்துக்கு ஏற்ற சேவைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றாலும், பதிவு தபால் சேவையை தொடர்ந்திருக்கலாம் என்ற கூற்று, மறுக்க முடியாததாக உள்ளது.