மலைத்தேன் உற்பத்தியை பெருக்கணும்; அரசு நடவடிக்கை தேவை
பொள்ளாச்சி; பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மலைத்தேன் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய கிராமங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள் போன்றவற்றால், தேன் உற்பத்தி சிறந்த விளங்குகிறது.இங்குள்ள மலைப்பகுதிகளில், பாறை இடுக்குகள் மற்றும் பெரிய மரக்கிளைகளில், மலைத்தேன் கூடுகளை ஆங்காங்கே காண முடிகிறது.வனங்கள் மற்றும் வனம் ஒட்டிய கிராமப்புறங்களில், அதிகப்படியான மூலிகைச்செடிகள், மரங்கள் நிறைந்து காணப்படுவதால், இவை அனைத்தும் ஒரு ஆண்டில், வெவ்வேறு தருணங்களில், பூக்கள் பூக்கின்றன.அவ்வகை பூக்களில் இருந்து, தேனீக்கள் சேகரிக்கும் தேன், மலைவாழ் மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் அமைகிறது.ஆனால், நவீன முறையிலான விவசாயம், செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து பயன்பாடு போன்ற காரணங்களால் தேனீக்களின் இனம் அழிந்து வருகிறது.இதனால், மலைப்பகுதியிலும், உயர்ந்த மரங்களிலும் பரவலாக காணப்பட்ட தேன் கூடுகள், சற்று குறைந்துள்ளது. தவிர, அடுக்குத்தேன், கொசுந்தேன், கொம்புத்தேன் உற்பத்தியும் குறைந்துள்ளதால், தேன் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பழங்குடியின மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.வன ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது: சித்த மருத்துவத்தில் தேன், துணை மருந்தாக பயன்படுத்தப்பட்டது. தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த தேன் சிறந்த மருந்தாகும். அடுக்குத்தேன், மலைத்தேன், கொசுந்தேன், கொம்புத்தேன் உற்பத்தியை பெருக்கி, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க, அரசு நடவடிக்கை எடுத்தல் அவசியம்.இவ்வாறு, தெரிவித்தார்.