அரசு பஸ் சிறைபிடிப்பு: சமரசம் செய்து விடுவிப்பு
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா(டான்டீ) ராயான்டிவிஷன் செல்லும் வழியில் உபாசி உள்ளது. வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், சின்கோனா ரயான்டிவிஷனுக்கு இயக்கப்படும் அரசு பஸ் நாள் தோறும் காலை, மாலை வரை ஐந்து முறை, உபாசி வரை செனறு, அதன்பின் ரயான்டிவிஷன் செல்கிறது. இந்நிலையில், உபாசி செல்லும் ரோடு மோசமான நிலையில் உள்ளதால், பஸ் கடந்த சில நாட்களாக இரண்டு முறை மட்டுமே உபாசிக்கு இயக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த சின்கோனா உபாசி மக்கள், தினமும், 5 முறை பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு பஸ்சை சிறைபிடித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார், பொதுமக்களிடம் சமரசமாக பேசினர். அதன்பின், இது குறித்து அரசு பஸ் கிளை மேலாளரிடம் பேசி விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பின் பஸ் விடுவிக்கப்பட்டது.