அரசு பொருட்காட்சி துவங்கியது; 33 அரசு துறை அரங்குகள் திறப்பு
கோவை; கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில், அரசு பொருட்காட்சி நேற்று துவங்கியது. 26 அரசு துறை அரங்குகள், 7 அரசு சார்பு நிறுவன அரங்குகள் இடம் பெற்றுள்ளன. தமிழக செய்தி - மக்கள் தொடர்புத் துறை சார்பில், கோவை வ.உ.சி., மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை, அமைச்சர் சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள், செயல்பாடுகளை, அனைவரும் அறியும் வகையில், செய்தி--மக்கள் தொடர்புத்துறை அரசு பொருட்காட்சிகளை நடத்தி வருகிறது. அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளவும், தகவல்களைப் பெறவும், பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டுகளித்து, புத்துணர்வு பெற பொருட்காட்சி வழிவகுக்கிறது. கோவையில், 38வது பொருட்காட்சி; ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.காவல்துறை, வனத்துறை, சுற்றுலா, தொழில், ஊரக வளர்ச்சி, வேளாண், கால்நடை பராமரிப்பு, மக்கள் நல்வாழ்வு, கூட்டுறவு, வருவாய், சமூகநலன் உள்ளிட்ட அரசு துறைகள், சார்பு நிறுவனமான மாநகராட்சி, ஆவின், மாசு கட்டுப்பாடு, குடிநீர் வடிகால், மின்சாரம், வீட்டு வசதி வாரியம், மகளிர் மேம்பாட்டு கழகம் என, 33 துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களுக்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் தனியார் அரங்கு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.