பார்வையற்றோருக்கு உதவும் கண்ணாடி, வாக்கிங் ஸ்டிக் ; வடிவமைத்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
சூலுார்; பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில், சென்சார் கண்ணாடி, வாக்கிங் ஸ்டிக்கை, அரசு பள்ளி மாணவர்கள் வடிவமைத்து அசத்தியுள்ளனர்.கோவை மாவட்டம் சூலுார் அடுத்த அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மருதீஷ், ஜசக் ஜெபக்குமார், வீரமணி ஆகியோர் கண் பார்வை இழந்தவர்களுக்கு உதவும் வகையில், சென்சாருடன் கூடிய ஸ்மார்ட் கண் கண்ணாடி, வாக்கிங் ஸ்டிக் ஆகியவற்றை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.பள்ளியில் உள்ள ஸ்டெம் ஆய்வு கூடத்தில் இந்த உதவி உபகரணங்களை வடிவமைத்து உள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:மைக்ரோ கண்ட்ரோல் சென்சார் தொழில்நுட்பம் வாயிலாக கண்ணாடி மற்றும் ஸ்டிக்கை உருவாக்கி உள்ளோம். பேட்டரியில் இயங்கும் இவற்றை பயன்படுத்தும் பார்வையற்றோர், நடந்து செல்லும் போது, எதிரில் உள்ளவற்றை அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பும். அதன் மூலம் அவர்கள் விலகி செல்ல முடியும். இது அவர்களுக்கு பிறரின் துணையின்றி வெளியில் செல்ல உதவியாக இருக்கும். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கூகுள் மேப் உதவியுடன் அவர்கள் செல்லும் இடங்களை தேர்வு செய்யும் வசதியையும் இதில் கொண்டு வர உள்ளோம். தலைமையாசிரியர், வகுப்பாசிரியர், ஆய்வக ஆசிரியர் ஆகியோர் எங்களை ஊக்கப்படுத்தியதால், எங்களுக்கு இது சாத்தியமானது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.