அரசு டவுன் பஸ்கள் அடிக்கடி மக்கர் ; முறையாக பராமரிக்க வலியுறுத்தல்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, டவுன் பஸ் திடீரென, 'மக்கர்' ஆகி நின்றதால் பயணியர் அவதிக்குள்ளாயினர். பொள்ளாச்சியில் அரசு போக்குவரத்து கழகத்தின் மூன்று கிளைகளில் இருந்து, உள்ளூர் போக்குவரத்துக்கும், கோவை, பழநி, தாராபுரம், திருப்பூர், கேரளா உள்ளிட்ட வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சி கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில், இருக்கைகள் சேதமடைந்து, படிக்கட்டுகள் உடைந்து, பஸ்சில் பயணியர் நிற்கும் தளம் உருக்குலைந்து, ஏராளமான ஒட்டு வேலைகள் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசு பஸ்கள் உருக்குலைந்து, புகை கக்கும் வாகனங்களாக மாறி விட்டன. சரியான பராமரிப்பும் இல்லாததால், அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், பராமரிப்பின்றி இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு வழித்தடத்தில் பாதி வழியில் கோளாறு ஏற்பட்டு நிற்பது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், பெதப்பம்பட்டியில் இருந்து (வழித்தட எண் 24பி) பொள்ளாச்சிக்கு பயணிகளுடன் வந்த பஸ், மரப்பேட்டை அருகே திடீரென 'மக்கர்' ஆகி நின்றது. இதையடுத்து, பயணியர் இறக்கி விடப்பட்டு மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பராமரிப்பின்றி இருப்பதால், வழித்தடத்தில் பழுதாகி நிற்கின்றன. அதில் பயணிப்போர் அவதிப்படுகின்றனர். பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல், அலட்சியம் காட்டுவதால் இதுபோன்று பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி பஸ்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.