உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராம சபை கூட்ட தீர்மானங்கள் நடைமுறைக்கு வரணும்! பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு

கிராம சபை கூட்ட தீர்மானங்கள் நடைமுறைக்கு வரணும்! பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு

பெ.நா.பாளையம்; கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைக்கு கொண்டுவர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் தங்களுடைய கோரிக்கைகளை முறையிடவும், அதை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், கிராம சபை கூட்டம் ஒரு வாய்ப்பாக ஊராட்சி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் ஜன., 26 மார்ச், 22, மே 1, ஆக.,15, அக்., 2, நவ., 1 ஆகிய, 6 நாட்களும் அந்தந்த பகுதியில் கிராம ஊராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும். வரும், 15ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்கிறது. தற்போது கிராம ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், மற்றும் உறுப்பினர்கள் இல்லாததால், கிராம ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகிக்கும், அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி ஒன்றியத்தின் பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராம ஊராட்சியில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடியாக தெரிவித்து, அதை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த கிராம சபை கூட்டத்தின் போது, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த நிலைகளை, தற்போதைய கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் விளக்கிக் கூற வேண்டும். ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில் இவை மேற்கொள்ளப்படுவதில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களில் மூன்றுக்கு ஒரு பங்குக்கு குறையாமல் பெண்கள் இடம்பெற வேண்டும். கிராம ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் விகிதாச்சாரம் எதுவோ அதே விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். ஒரு கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடுத்த கிராம சபை கூட்டத்தில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை படித்து காட்ட வேண்டும். ஆனால் பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் விபரங்கள் தெரிவிப்பதில்லை. பல ஊராட்சிகளில் அரை மணி நேரத்துக்குள் கிராமசபை கூட்டம் அவசர, அவசரமாக முடிக்கப்படுகிறது. கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து, அதன் மீது ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளத்தான் கிராம சபை கூட்டம். ஆனால் பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் இது நடப்பதில்லை. வரும் சுதந்திர தினத்தின் போது நடக்கும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையாவது நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ