உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டோரத்தில் பள்ளம்; வாகன ஓட்டுநர்கள் அச்சம்

ரோட்டோரத்தில் பள்ளம்; வாகன ஓட்டுநர்கள் அச்சம்

ரோட்டோரத்தில் குப்பை

பொள்ளாச்சி நியூ ஸ்கீம் ரோட்டில் இருந்து, பல்லடம் ரோடு சந்திப்பின் அருகே பழைய டிரம் மற்றும் குப்பை தேக்கம் அடைந்துள்ளது. இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் இதை கவனித்து குப்பபையை அகற்றம் செய்ய வேண்டும்.-- -ராஜ்குமார், பொள்ளாச்சி.

ரோட்டோரம் பள்ளம்

பொள்ளாச்சி, வடக்கிபாளையம் பிரிவு முதல் மகாலிங்கபுரம் வரை ரோட்டின் ஓரத்தில் மழை நீர் சென்று, மண் அரிமானம் ஏற்பட்டு பள்ளமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் ரோட்டின் ஓரத்தில் செல்ல அச்சப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை கவனித்து ரோட்டின் ஓரத்தை சீரமைக்க வேண்டும்.- -கவுதம், பொள்ளாச்சி.

ரோட்டோரத்தில் செடிகள்

கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டின், இருபக்கமும் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இவ்வழியில் இரவு நேரத்தில் நடந்து செல்லும் பயணியர் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இதை ரயில்வே நிர்வாகம் கவனித்து ரோட்டோர புதர்களை அகற்ற வேண்டும்.- -தினேஷ், கிணத்துக்கடவு.

போக்குவரத்து நெரிசல்

வால்பாறை நகரின் முக்கிய இடங்களில், சுற்றுலா பயணியர் வாகனங்கள் அதிகரிப்பால் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதை போலீசார் கவனித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -நந்தினி, வால்பாறை.

பயணியர் தவிப்பு

உடுமலையிலிருந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு போதுமான ரயில்கள் இல்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவு ரயில்களில் மக்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை.

நகராட்சியினர் கவனத்திற்கு

உடுமலை, பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டில் பாதாள சாக்கடை குழிகளின் மூடிகள் உடைந்த நிலையிலும், உள்வாங்கியும் உள்ளது. கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது உடைந்து உள்ளே விழும் ஆபத்தான நிலையில் மூடிகள் உள்ளன.இதை நகராட்சியினர் சீரமைக்க வேண்டும்.- மணிமேகலை, உடுமலை.

பள்ளத்தை சரிசெய்யுங்க

உடுமலை, பசுபதி வீதி ரோட்டில் பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழியில் பழுது பார்ப்பதற்கு ரோட்டில் குழி தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த பின்பும், ரோடு சீரமைக்கப்படாமல் பள்ளமாக மாறியுள்ளது. தற்போது அதில் மழைநீர் முழுவதும் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுநர்கள் குழியை கவனிக்க முடியாமல் பள்ளத்தில் வாகனங்களை விடுகின்றனர்.- கணேசன், உடுமலை.

மழை நீர் தேக்கம்

பொள்ளாச்சி - பல்லடம் ரோடு சூடாமணி சந்திப்பில், ரோட்டின் ஒரு பகுதியில் மழைநீர் தேக்கமடைந்து உள்ளது. இதனால், பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டுநர்கள் இவ்வழியில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. சுகாதார பாதிப்பு நிலவுகிறது. மழை நீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -சரத், பொள்ளாச்சி.

'லொள்' தொல்லை

உடுமலை, ஐஸ்வர்யா நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் வீடுகளின் முன் கூடி அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் சத்தமிட்டுக்கொண்டும், துரத்துவதுமாக உள்ளன. வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் நாய்கள் துரத்துவதால் தடுமாறி கீழே விழுகின்றனர்.- திருமூர்த்தி, உடுமலை.

சுகாதார சீர்கேடு

உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சுற்றுப்பகுதி திறந்த வெளிக்கழிப்பிடமாக மாறிவிட்டது. பொதுமக்கள், பயணியர் முகம் சுழிக்கும் வகையில், பலரும் சுற்றுச்சுவரை திறந்த வெளிக்கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கிருஷ்ணவேணி, உடுமலை.

துார்வார வேண்டும்

உடுமலை - பழநி ரோடு கழுத்தறுத்தான் பள்ளம் நீர்நிலையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இதில், பணிகள் முடிவடையாததால், கழிவுநீர், குப்பை தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சியினர் இந்த மழைநீர் வடிகாலை துார்வார வேண்டும்.- கதிரேசன், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை