ஜாப் ஒர்க்குக்கு ஜி.எஸ்.டி. குறைக்கணும்; மத்திய நிதியமைச்சரிடம் கேட்கிறது கொடிசியா
கோவை; சமீபத்திய ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தில், தனிப்பிரிவுகளாக வகைப்படுத்தப்படாத எஞ்சிய ஜாப் ஒர்க்குகளுக்கு (ரெசிடியூல் என்ட்ரி) ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை, 5 சதவீதமாக குறைக்க, கொடிசியா வலியுறுத்தியுள்ளது. மத்திய நிதியமைச்சருக்கு கொடிசியா தலைவர் கார்த்திகேயன் அனுப்பியுள்ள கடிதம்: குறு, சிறு நிறுவனங்கள், சர்வீஸ் அக்கவுன்டிங் கோடு பிரிவின் கீழ், ஜாப் ஒர்க் சேவை செய்து வருகின்றன. வரிசை எண் 6ன் படி, தனியாக வகைப்படுத்தப்படாத எஞ்சிய ஜாப் ஒர்க், 'ரெசிடியூயல் என்ட்ரி' எனக் குறிப்பிடப்பட்டு, 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ரெசிடியூயல் என்ட்ரி முன்னதாக இப்பிரிவு, 12 சதவீத ஜி.எஸ்.டி. வரம்பில் இருந்தது. வகைப்படுத்தப்பட்ட ஜாப் ஒர்க்குகளுக்கு 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், ரெசிடியூயல் என்ட்ரி, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சரக்குகளை முதன்மை உற்பத்தியாளரிடம் இருந்து பெறுகின்றன. மெஷினிங், பெண்டிங், வெல்டிங், கட்டிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க்குகளைச் செய்து முடித்து, அதே பிரதான உற்பத்தியாளருக்கு திருப்பி அனுப்புகின்றன. இது, உற்பத்தி நடைமுறையில் உள்ளடங்கும் ஒரு பகுதிதான். இதற்கு, உள்ளீட்டு வரிச் சலுகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. என்பது, ஒரே மாதிரியான சேவையில் விலை வேறுபாட்டை ஏற்படுத்தும். மூலதனத்தில் தாக்கம் வரும் இந்த வரிவிதிப்பு, ஜாப் ஒர்க் நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். சரக்குக்கான வரியானது, முதன்மை உற்பத்தியாளரால் செலுத்தப்பட்ட ஒன்று. வருமான வரிச்சட்டம் 43 பி(ஹெச்), எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினாலும், நடைமுறையில் இது சாத்தியமாவதில்லை. ஜாப் ஒர்க் நிறுவனங்கள் 60 முதல் 120 நாட்களில்தான், தங்களுக்கான பணத்தைப் பெறுகின்றன. இது, அவர்களின் செயல்பாட்டு மூலதன புழக்கத்தைப் பாதிக்கிறது. எனவே, ரெசிடியூயல் என்ட்ரி என்ற பிரிவில் அடங்கும் ஜாப் ஒர்க்குகளுக்கு ஜி.எஸ்.டி.யை, 1 முதல் 5 வகையான ஜாப் ஒர்க்குகளுக்கு இணையாக, உள்ளீட்டு வரிச் சலுகையுடன், 5 சதவீதம் என மாற்றிமைக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.பி.,யுடன் 'சியா' சந்திப்பு
சின்னவேடம்பட்டி தொழில்துறை சங்கம் (சியா) சார்பில், அதன் தலைவர் தேவகுமார் மற்றும் நிர்வாகிகள், எம்.பி.ராஜ்குமாரை சந்தித்து, 'ஹெச்.எஸ்.என் 9988 குறியீட்டுக்குள் வரும் அனைத்து ஜாப் ஒர்க் சேவைகளும் 5 சதவீத ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதனை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்' என கோரிக்கை மனு அளித்தனர்.