ஜி.டி.கார் அருங்காட்சியகத்தில் ‛பர்பாமன்ஸ் கார் பிரிவு துவக்கம்
கோவை: கோவை ஜி.டி.கார் அருங்காட்சியகத்தில், 'பர்பாமன்ஸ் கார்' பிரிவு நேற்று துவங்கப்பட்டது. ஜி.டி. நாயுடு அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜ்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சர்வதேச வரலாற்று வாகனங்களின் கூட்டமைப்பின் துணை தலைவர் ராமின் சல்லேகு, பர்பாமன்ஸ் கார்' பிரிவை துவக்கி வைத்தார். பழமையான கார்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள, சர்வதேச அமைப்பான பிவா', ஜி.டி., நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலுக்கு, பிவா ஹால் ஆப் பேம் 2025' விருது வழங்கியது. இக்கவுரவத்தை பெறும் இரண்டாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், ஜி.டி.கோபால் பேசுகையில், ''புதிய முயற்சியாக, இளைய தலைமுறை, வாகனங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், வாகனத்துறையின் அவர்களின் ஆர்வத்தை தாக்க வைக்கவும், வாகனங்களை பாதுகாக்கவும் பர்மார்மன்ஸ் கார்' பிரிவு எனும் புதிய பகுதியை சேர்த்துள்ளது,'' என்றார். பிவா ஹால் ஆப் பேம் 2025' விருது குறித்து, அமைப்பின் ஆலோசகர் கவுதம் சென் பேசினார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களான சாந்தாராம், ஜெயச்சந்திரன், கார்த்திகேயன், வித்யபிரகாஷ், விஜயகுமார் ஆகியோருக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விருது வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் தொழில் மற்றும் புதுமைகளின் துவக்க காலங்களில் முன்னோடியாக திகழ்ந்தவர், ஜி.டி.நாயுடு. பல தசாப்தங்களுக்கு பிறகும், புதுமை என்ற எண்ணமே உற்பத்தியை முன்னேற்றுகிறது. வணிக நடவடிக்கைகள் வேலை வாய்ப்பை உருவாக்கி, வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் வழி வகுக்கின்றன. இவ்வாறான குடும்பத்தால் நடத்தப்படும் அருங்காட்சியகம், உலகில் வேறு எங்கும் இல்லை. இது, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்று. இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டர் பவன்குமார், கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அருங்காட்சியகத்தின் பொது மேலாளர் சுரேஷ் நாயுடு நன்றி கூறினார். 'பர்பாமன்ஸ் கார்' பிரிவை, பொதுமக்கள் வரும் 22ம் தேதி முதல் பார்வையிடலாம்.