மேலும் செய்திகள்
'மகிழ் முற்றம்' குழு தேர்வு
18-Nov-2024
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் 'மகிழ் முற்றம்' அமைப்பு துவக்க விழா நடந்தது.பொள்ளாச்சி அருகே, நெகமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களின் ஆளுமைத்திறன் மேம்பாடு செயல்களை வளர்க்கும் வகையில், 'மகிழ் முற்றம்' அமைப்பு துவக்க விழா நடந்தது. உள்ளாட்சி பிரதிநிதி அரவிந்த்சாமி, கல்வியாளர் பாலகிருஷ்ண குப்தா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் திவ்யா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.மாணவர்களின் ஆளுமைத்திறன் மேம்படுத்த ஐந்து குழுக்கள் பிரிக்கப்பட்டு, கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இக்குழு வாயிலாக மாணவர்கள், அரசியல், அறிவியல் சார்ந்த அனுபவங்கள், ஆளுமைத்திறன், இணை செயல்பாடுகளில் புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் அணியின் கொடி பள்ளியில் பறக்க விடப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, மாணவர்கள் குழுக்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.மகிழ் முற்றம் அமைப்புக்கு பொறுப்பாசிரியராக அருண், ஐந்து குழுக்களுக்கு பொறுப்பாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் உள்ளிட்டோர் வழிகாட்டும் குழுவாக நியமிக்கப்பட்டனர். கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர் மதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 73 அரசு பள்ளிகளில் 'மகிழ் முற்றம்' அமைப்பு துவங்கப்பட்டது. இதில், மாணவர்கள் தலைமை பண்பை வளர்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என மாணவர்களை குழுவாக அமைத்து, ஒவ்வொரு குழுவுக்கும், ஒரு பொறுப்பு ஆசிரியர், தலைவர், துணை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் கொடி மற்றும் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் வாயிலாக, மாணவர்கள் செயல்திறன் மேம்படுத்துதல், விடுப்பு எடுப்பதை குறைதல், ஒற்றுமை, சிறந்த பண்புகளை வளர்த்தல் போன்றவைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். வால்பாறை
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின் படி மாணவர்கள் நலனுக்காகவும், தலைமை பண்பை வளர்க்கும் வகையிலும் 'மகிழ் முற்றம்' அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். ஆசிரியை ஜோதிமணி வரவேற்றார். நிகழ்ச்சியில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டன.குறிஞ்சி (சிவப்பு வண்ணம்) தலைவர் டெய்சிலீமா, முல்லை (மஞ்சள்) தலைவர் கவுரி, மருதம் (பச்சை) தலைவர் சுப்புராஜ், நெய்தல் (நீலம்) தலைவர்வசந்த், பாலை (வெள்ளை) தலைவர் தனபாக்கியம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் குழு அமைப்பினை, 'மகிழ் முற்றம்' என்ற பெயரில் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. மாணவர்களின் தலைமை பண்பை வளர்க்கும் வகையில், குழுக்களை அமைத்து, மாணவர்கள் தலைவர், அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன் வாயிலாக மாணவர்கள் மத்தியில் அரசியல் சார்ந்த அனுபவங்கள், ஆளுமை திறன் மேம்பட, மாதிரி சட்டசபை மற்றும் பார்லிமென்ட் கூட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு, கூறினர்.
18-Nov-2024