கழிவுநீரை குடிக்கும் ஆ டு , மாடுகளுக்கு பாதிப்பு; கால்நடைத்துறை டாக்டர் தகவல்
பொள்ளாச்சி : கிராமங்களில் உள்ள நீராதாரங்கள் கழிவுகள் கொட்டுமிடமாக மாறுவதால், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நீர்நிலைகள் துாய்மை காக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், குளம், குட்டைகள், நீரோடை போன்றவை உள்ளன. அவற்றில் மழைநீர் தேங்கி நிற்பதால், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால், கோடைக்காலங்களில், தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் இல்லாமல் இருந்தது.காலப்போக்கில், குளம், குட்டைகளில் கழிவுநீர் கலப்பதுடன், கழிவுகள் கொட்டுமிடமாக மாறி, நீர் ஆதாரம் பாதித்துள்ளதுடன், நீர் மாசுபட்டுள்ளது.இந்நிலையில், இவற்றை கால்நடைகள் குடிப்பதால் அவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும் என, கால்நடைத்துறை டாக்டர்கள் தெரிவித்தனர்.கோவில்பாளையம் கால்நடை மருந்தக டாக்டர் அசோகன் கூறியதாவது:நீர்நிலைகள், ரசாயன கழிவுகள் முதல் மிதக்கும் பிளாஸ்டிக் கவர்கள் என, பலவிதமான கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை குடிக்கும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். பெரும்பாலான மாசுநீர் நோய்கள், செரிமான அமைப்பை பெரியளவில் பாதிக்கும். சுவாச மண்டலத்தை மோசமாக்கும்.வயிற்று போக்கு போன்ற நோய்களை பரப்புவதுடன், நரம்பியல் கோளாறுகள், இனப்பெருகக பிரச்னைகள், பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு போன்ற பிற உடல்நல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.கறவை மாடுகளுக்கு ஒரு நாளுக்கு தேவையான சராசரி நீரின் அளவு, 25 - 30 லிட்டராகும். கறவை மாடுகளின் உடல் எடையில், 70 சதவீத நீரும், பாலில், 87 சதவீதம் நீரும் உள்ளது.நீரானது உணவு உட்கொள்ளுதல், செரித்தல், செரித்த உணவிலிருந்து தேவையான சத்து பொருட்களை ரத்தத்தில் சேர்த்தல் உள்ளிட்ட வேலைகளுக்கு அவசியமாகிறது.குறைவான அளவு நீரை மாடுகள் அருந்தும் போது, உணவு செரிமானம் பாதிக்கப்படுகின்றன. உடலின் வெப்பநிலை அதிகரித்து சோர்வும், தளர்ச்சியும் ஏற்படுகிறது. சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது.நீர் உட்கொள்ளுதல், 20 - 22 சதவீதமாக குறையும் போது, கால்நடைகள் இறக்கவும் நேரிடுகிறது. மாடுகளுக்கு அளிக்கப்படும் நீரானது, சுத்தமாகவும், கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம்.அசுத்தமான நீரால் குடற்புழு நோய்கள், பாக்டீரியா எனும் நுண்ணுயிரி வாயிலாக தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் ஏற்படலாம். தாது உப்புகளினால் உண்டாகும் நோய்கள், கோழிகளில் பேரிழப்பை உண்டாக்க கூடும்.மாடுகளுக்கு அளிக்கும் நீருடன், கழிவுநீர் கலக்காமல் பார்த்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம். இதனால், நோய் உண்டாகும் கிருமிகள், குடிநீருடன் கலந்து கால்நடைகள், கோழிகளில் பெரும் சேதத்தை விளைவிக்கலாம்.ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில், சமீப காலமாகவே கழிவுநீர் அதிகளவு கலப்பதால் அந்நீரில் தட்டை புழுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த தண்ணீரை ஆடு, மாடுகள் குடிக்கும் போது தட்டை புழுக்கள், ரத்த குழாயின் வழியாக கல்லீரலுக்குள் சென்று விடுகின்றன.சில நாளில் மாடு, ஆடுகளுக்கு தாடை, கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எடை குறைந்து விடுகிறது. நோய்க்கு சிகிச்சை பெறாவிட்டால் சினை பிடிக்காமலும், சாணம் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட கழிவு பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற முடியாமலும் இறந்து விடுகின்றன. எனவே, கால்நடைகளை பாதுகாக்கும் வகையில், நீர் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.