உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாலை, இரவில் கொட்டித் தீர்த்த கனமழை! வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

மாலை, இரவில் கொட்டித் தீர்த்த கனமழை! வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

பொள்ளாச்சி, உடுமலை சுற்றப்பகுதியில் தினமும் மாலை, இரவு நேரத்தில் கனமழை பெய்வதால், ரோடுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டது; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, கெடிமேடு, நெகமம், கோலார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஓடியது. வாகன ஓட்டுநர்கள், வேகத்தை குறைந்து, அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. அதேநேரம், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், சிரமம் ஏற்பட்டது.கோலார்ப்பட்டியில், மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து, துரித கதியில், வடிகாலில் அடைப்பு சீரமைக்கப்பட்டது.பூசாரிப்பட்டி அடுத்த சீ.மலையாண்டிபட்டினத்தில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கியது. இரவில் துாக்கத்தை தொலைத்த மக்கள், விடியும் வரை, வீட்டிற்குள் தேங்கிய வெள்ளத்தை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.கொள்ளுப்பாளையம் ரயில்வே கேட் தரைப்பாலத்தில் வெள்ளம் தேங்கியதால், வாகனங்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டு, அங்கேயே நிறுத்தப்பட்டது. சுரங்கபாலத்தில் மழை நீரில் சிக்கிய வாகனத்தை, மீட்பு வாகனம் கொண்டு மீட்டனர்.பல்லடம் ரோட்டில், புளியம்பட்டி, ராசக்காபாளையம், நெகமம் மற்றும் கப்பளாங்கரை உள்ளிட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது.மக்கள் கூறுகையில், 'பருவமழை பாதிப்புகளை தவிர்க்க, உள்ளாட்சி அமைப்புகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. பொக்லைன் உட்பட இயந்திரங்கள், கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் உதவியுடன் துாய்மைப் பணியாளர்களை தயார்படுத்த வேண்டும்,' என்றனர்.

உடுமலை

உடுமலை நகர பகுதிகளில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் ரோடுகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு மற்றும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இயற்கை நீர் வழித்தடங்களாக உள்ள தங்கம்மாள் ஓடை, நாராயணன் காலனி ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் ஓடை, திருப்பூர் ரோடு மற்றும் தாராபுரம் ரோடுகளில் உள்ள ஓடைகள் துார்வாரப்பட்டது.உடுமலை ராஜேந்திரா ரோடு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் வடிகால் துார்வாரப்பட்டு, தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டது.அதே போல், ஆசாத் வீதி, தளி ரோடு வி.வி., லே-அவுட், தாராபுரம் ரோடு, தங்கம்மாள் ஓடை வீதி, திருப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும், ஓடை மற்றும் மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.பொக்லைன் இயந்திரம் வாயிலாக துார்வாரப்பட்டு, தேங்கியிருந்த வெள்ள நீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.மழை நீர் தேங்கிய பகுதிகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து, அகற்றவும், மழை நீர் வடிகால் மற்றும் ஓடைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, துார்வாரவும் நகராட்சி அதிகாரிகள் முன் வர வேண்டும்.தளி ரோட்டில், போடிபட்டி பகுதியில், ரோட்டில் மழை நீர் தேங்கியுள்ளது. இரு புறமும் வடிகால் கட்டமைப்பு இருந்தும், ஆக்கிரமிப்பு காரணமாக, மூடப்பட்டுள்ளது.இப்பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில், நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வடிகால் வசதிகளை அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வால்பாறை

வால்பாறையில், கடந்த, 10 நாட்களாக மழை தீவிரமடைந்ததால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, 8வது முறையாக சோலையாறு அணை நிரம்பியது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று, 160.19 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 705 கனஅடி நீர் வரத்தாகவும், 982 கனஅடி நீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.வால்பாறையை சுற்றிபார்க்க வந்த சுற்றுலா பயணியர் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில், நேற்று காலை முதல் மழை பொழிவின்றி வெயில் நிலவியதால், சுற்றுலா பயணியரும், தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள், புத்தாடை வாங்க செல்லும் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

மழையளவு நிலவரம்

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):வால்பாறை - 43, சோலையாறு - 12, பரம்பிக்குளம் - 5, மேல்நீராறு - 28, கீழ்நிராறு - 59, காடம்பாறை - 22, துாணக்கடவு - 2, பெருவாரிப்பள்ளம் - 4, நவமலை - 12, பொள்ளாச்சி - 70, நெகமம் - 34, பெதப்பம்பட்டி - 37 என்ற அளவில் மழை பெய்தது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை