மேலும் செய்திகள்
பலத்த காற்றுடன் கொட்டிய மழை வாழை மரங்கள் சேதம்
16-Apr-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகரில் நேற்று மதியம், ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் காலையில் இருந்து அனல் பறக்கும் வெயில் அடித்தது. மதியம், 2:00 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 3:00 மணிக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இதேபோன்று சிறுமுகை, காரமடையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மேட்டுப்பாளையம் நகரில், பலத்த காற்றுடன் தொடர்ந்து ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தாசம்பாளையம் சாலையில் புருஷோத்தமன் நகர் அருகே, சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய மரம், வேரோடு சாலையில் சாய்ந்தது. அதேபோன்று சிறுமுகை பழத்தோட்டம் பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு, பல இடங்களில் மரங்கள் முறிந்து, மின் கம்பிகள் மீது விழுந்தன. இதில் மின்கம்பிகள் அறுந்து கீழே தொங்கின. சாலையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த கனமழை குறித்து சேதம் ஏதேனும் உள்ளதா என, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சூலுார்
சூலுார் சுற்றுவட்டார பகுதிகளான, சின்னியம்பாளையம், நீலம்பூர், அரசூர், பள்ளபாளையம், சூலுார், காங்கயம்பாளையம், காடாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது. விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
கோவை மாவட்டம் காரமடையில் நேற்று மாலை மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, மழை நீர் வடிந்து செல்ல வடிகால்கள் இல்லாததால் மழைநீர் வீடுகளுக்குள் சென்றது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அருகில் உள்ள சிக்கதாசம்பாளையம் அம்மன் நகர் பகுதியில் இணைக்க அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மழை நீர் வடிக்கால் இணைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த பிறகும், இணைக்க முடியாமல் இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் விரைந்து இணைத்து தர வேண்டும், என்றனர்.----
16-Apr-2025