கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிருக்கு தடை நீட்டிப்பு
வால்பாறை; வால்பாறையில் தொடர் கனமழை பெய்யும் நிலையில், ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிர் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வால்பாறையில் தற்போது மழை தீவிரமாக பெய்யும் நிலையில், இங்குள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, பிர்லா நீர்வீழ்ச்சி, சோலையாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.வால்பாறை நகராட்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில் சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சோலையாறு பிர்லா நீர்வழிப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில், 'சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, பிர்லா நீர்வழிப்பாதை உள்ளிட்ட ஆறுகள் மிகவும் அபாயகரமானது. மழை காலங்களில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், இங்குள்ள ஆறுகளில் இறங்குவது, குளிப்பது, துணி துவைப்பது, கால்நடைகளை மேய்ப்பது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது.தடை செய்யப்பட்ட பகுதியில், சுற்றுலா பயணியர் குளிக்க முயன்றால், போலீஸ் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.